தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில், 3 தலைமுறையாக சாலை வசதி இல்லாத கிராமம்

வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் 3 தலைமுறையாக சாலை வசதியே இல்லாத மலைக்கிராம மக்கள், தங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-08-27 22:00 GMT
வாணியம்பாடி,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தமிழக, ஆந்திர எல்லைப்பகுதியில் கடந்தசில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இம்மழையால் நாராயணபுரத்தை அடுத்த தகரமானமூலை கிராமத்துக்குச் செல்லும் மண் சாலை காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு முற்றிலும் காணாமல் போய் விட்டது. இச்சாலையைச் சீரமைக்கக் கோரி கிராம மக்கள் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

தகரமானமூலை கிராமம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் மண்டலம் கங்குந்தி ஊராட்சியைச் சேர்ந்துள்ளது. தமிழக-ஆந்திர மாநில எல்லையில் மலையில் இருக்கும் எங்கள் கிராமத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் பள்ளி மாணவர்கள் 25 பேர் அடங்குவார்கள்.

பல ஆண்டுகாலமாக இப்பகுதியில் மழைப் பெய்தால் இப்பகுதிக்கு வர ஒரே வழியான மண் சாலை முற்றிலும் சேதமடைந்து, அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கோ, பள்ளி மாணவர்கள் தமிழகத்தில் உள்ள நாராயணபுரம், திம்மாம்பேட்டை மற்றும் வாணியம்பாடி பகுதிக்குச் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டு வருவதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே சாலை வசதி ஏற்படுத்தி தர ஆந்திர அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இப்பிரச்சினையை கங்குந்தி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான லோகேஸ் (தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்) மற்றும் குப்பம் மண்டல தாசில்தார் ஆகியோரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

தேர்தல் நேரத்தில் மட்டும் குப்பம் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்கள் ஓட்டுக்காக எங்கள் கிராமத்தைத் தேடி வருகின்றனர். அப்போது நாங்கள் அளிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்து விட்டு தேர்தல் முடிந்ததும் எங்கள் பகுதி பிரச்சினைகளை கூறும்போது அப்படி ஒரு கிராமம் உள்ளதா? என எங்களிடமே கேட்கின்றனர்.

மேலும் நாங்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எங்களின் அனைத்துத் தேவைகளுக்கும் அருகில் இருக்கும் தமிழகத்தை அணுகி வருகிறோம். எங்களின் பிள்ளைகளை தமிழகத்தில் தான் படிக்க வைக்கிறோம் என்றனர். பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றால் அவர்கள் இந்த மண் சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். கடந்த மூன்று தலைமுறையாகச் சாலை வசதியே இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். இனியாவது தங்கள் பகுதிக்குச் சாலை வசதி அமைத்துத் தர ஆந்திர அரசிடம் கேட்கிறோம்.

அப்படி இல்லை என்றால் தமிழகத்துடன் எங்கள் கிராமத்தை இணைத்து விடுங்கள், நாங்கள் இருமாநில எல்லையில் மலைக் கிராமத்தில் வசிப்பதால் தீவில் வசிப்பது போல் உள்ளது, எங்களின் கோரிக்கையை இருமாநில அரசுகளும் கலந்து ஆலோசித்து நிரந்தர தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும்.

அவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்