விழுப்புரம் போக்குவரத்துக்கழக பணிமனையில் அரசு பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
விழுப்புரம் போக்குவரத்துக்கழக பணிமனையில் அரசு பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் தற்கொலைக்கான காரணம் தொடர்பாக உருக்கமான கடிதம் சிக்கியது.
விழுப்புரம்,
புதுச்சேரி மாநிலம் அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமராஜ் (வயது 55). இவர் விழுப்புரம் மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்திற்குட்பட்ட புதுச்சேரியில் உள்ள பணிமனையில் டிரைவராக வேலை செய்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கினால் அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் அலுவலர்கள், ஊழியர்களை அழைத்துச்செல்ல வசதியாக குறிப்பிட்ட சில அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதுச்சேரி பணிமனையில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு தினமும் இயக்கப்பட்டு வரும் 4 பஸ்களில் ஒரு பஸ்சில் இவருக்கு பணி வழங்கப்பட்டு பஸ்சை ஓட்டி வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை புதுச்சேரியில் இருந்து அரசு ஊழியர்களை பஸ்சில் ஏற்றிக்கொண்டு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து இறக்கினார். பின்னர் மாலையில் பணி முடிந்ததும் இவர்களை மீண்டும் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஏற்றிக்கொண்டு புதுச்சேரியில் விட வேண்டும். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் ஓய்வு எடுப்பதற்காக டிரைவர் ராமராஜ், விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக 2-வது பணிமனைக்கு சென்றார்.
இந்த சூழலில் நேற்று மாலை 3 மணியளவில் பணிமனை வளாகத்தில் உள்ள ஓய்வறைக்கு பின்புறமுள்ள ஒரு மாமரத்தில் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் ராமராஜ் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பணிமனை ஊழியர்கள் உடனடியாக இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகேசன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ராமராஜின் சட்டைப்பையில் இருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், தான் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து உருக்கமாக எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், எனது மனமாற்றத்திற்கு காரணம், பஸ்சில் வந்த பணியாளர்கள், பணிமனையில் இருந்த பயணச்சீட்டு பரிசோதகர் மற்றும் எனது உடைமைகளை பறித்துக்கொண்ட உறவினர் ஆகியோர்தான் என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனருக்கு எழுதிய கடிதத்தில், என்னுடைய சாவுக்கு பிறகு எனது குடும்பத்திற்கு சேர வேண்டிய பணப்பலன்களுக்காக என்னுடைய மனைவியை அலையவிடாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளதோடு என்னுடைய உடல் உறுப்புகளை பிறருக்கு தானமாக அளிக்கலாம் என்றும் அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.
இதன் அடிப்படையில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.