தச்சூர், வண்ணாங்குளத்தில் நேரடி நெல் கொள்முதல் மையம் - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் தச்சூர், வண்ணாங்குளத்தில் நேரடி நெல் கொள்முதல் மையங்களை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

Update: 2020-08-27 22:00 GMT
ஆரணி,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் ஆரணியை அடுத்த தச்சூர் மின்வாரிய அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் மையம் திறப்பு விழா கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடந்தது.

செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன், மாவட்ட கவுன்சிலர் அ.கோவிந்தராசன், ஒன்றிய குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஏழுமலை, ஜெயச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல மேலாளர் எஸ்.ஆர்.கோபிநாத் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று நேரடி கொள்முதல் மையத்தைத் திறந்து வைத்து விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் பணியை தொடங்கி வைத்துப் பேசினார்.

அவர் பேசியதாவது:-

2019-2020-ம் ஆண்டில் சம்பா பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் பொருட்டு 38 நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு 86,368 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. 15,910 விவசாயிகள் பயனடைந்தனர்.

தற்போது கூட குறுவை பருவத்தில் விவசாயிகளின் நலன் கருதி 18-ந்தேதி முதல் நமது மாவட்டத்தில் 12 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டு, அதில் ஒன்று இன்று (அதாவது நேற்று) தச்சூரில் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு விளைவித்த நெல்லை அறுவடை செய்த பிறகு தங்களது சொந்த இடத்திலேயே நன்கு உலர வைத்து 17 சதவீத ஈரப்பதத்துக்குள் பாதுகாத்து நெல் கொள்முதல் மையத்துக்குக் கொண்டு வாருங்கள். டோக்கன் பெற்று பதிவு செய்து விற்பனை செய்து பயனடையுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தாசில்தார் தியாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் கே.சங்கர், பி.ஆர்.ஜி.சேகர், மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் ஜாகீர்உசேன், நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேற்பார்வையாளர் ராமலிங்கம், சூப்பிரண்டுகள் அமலநாதன், பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் சமுதாயக்கூடத்தில் நேற்று நெல் கொள்முதல் மையம் தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். மண்டல மேலாளர் கோபிநாத், கொள்முதல் அலுவலர் பழனி, செய்யாறு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு, நெல் கொள்முதல் மையத்தை திறந்து வைத்தார். இதில் ஆவின் துணை தலைவர் பாரிபாபு, ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் சங்கர், திருமால், ஊராட்சி மன்ற தலைவர்கள் வண்ணாங்குளம் சங்கீதாவிக்னேஷ், ஒண்ணுபுரம் மகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் வசந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கொள்முதல் மைய பொறுப்பாளர் ஏழுமலை நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்