டீக்கடை உரிமையாளர் வெட்டிக் கொலை: தந்தை-மகன் உள்பட 5 பேர் கைது

மதுரையில் டீக்கடைக்காரர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தந்தை-மகன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;

Update: 2020-08-27 21:45 GMT
மதுரை,

மதுரை புதூர் சூர்யா நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 46). புதூர் பஸ் நிலையத்தில் டீக்கடை வைத்திருந்தார். இவர் நேற்று முன் தினம் காலை இரு சக்கர வாகனத்தில் சென்று கடைக்கு தேவையான பாலை வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் முருகன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

முருகன் மூன்றுமாவடியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் டீ கடைக்கு தேவையான பால் வாங்க ரூ.4 லட்சம் பணம் கொடுத்திருந்தார். ஆனால் அவர் பணத்தை வாங்கி கொண்டு சரியாக பால் வினியோகம் செய்யவில்லை என்பதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

மேலும் பால் வாங்கச் செல்லும் போது கிருஷ்ணன் மனைவி சித்ராவுடன் முருகனுக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கிருஷ்ணன் மற்றும் அவரது தரப்பினர் ஆத்திரத்தில் முருகன் வீட்டை சேதப்படுத்தினார்கள். இது தொடர்பாக புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இதற்கிடையில் கிருஷ்ணன் அவரது மனைவியை விவகாரத்து செய்து விட்டார். அதன்பின்னர் சித்ராவுக்கும், முருகனுக்கும் இடையே தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தனது மனைவியின் பிரிவுக்கு காரணமாக இருந்த முருகனை கிருஷ்ணன் தனது மகன் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த கொலையில் சம்பந்தப்பட்ட கிருஷ்ணன் (47) , அவரது மகன் தீபக் (24), ஒத்தக்கடை அஜீத்குமார் (24), அமீர்கான் (24), பாண்டி (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கொலைக்கான 3 ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினார்கள்.

இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை போலீஸ் கமிஷனர் வெகுவாக பாராட்டினார்.

மேலும் செய்திகள்