ரூ.2 கோடி கேட்டு தொழில் அதிபரை கடத்திய 5 பேர் அதிரடி கைது - முக்கிய குற்றவாளிக்கு போலீசார் வலைவீச்சு

சென்னை மண்ணடியில் ரூ.2 கோடி கேட்டு தொழிலதிபரை கடத்திய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-08-28 02:01 GMT
பெரம்பூர்,

சென்னை ஏழுகிணறு பெரியண்ணா தெருவை சேர்ந்தவர் திவான் அக்பர் (வயது 45). ‘ஸ்கிரீன் பிரின்டிங்’ கம்பெனி மற்றும் ஆடைகள் ஏற்றுமதி, பர்மா பஜாரில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்வது என பல்வேறு தொழில் செய்து வருகிறார்.

இவர் கடந்த 17-ந்தேதி சென்னை முத்தியால்பேட்டையில் உள்ள நண்பர் வீட்டிற்குச் சென்று வந்த போது காரில் வந்த மர்ம கும்பல் திவான் அக்பரை கடத்தியது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு வீட்டில் வைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. முதலில் அவரிடம் ரூ.5 கோடி பணம் கேட்டு மிரட்டினார்கள். பின்னர் கடத்தல்காரர்கள் தங்களுடைய கோரிக்கையை தளர்த்தி ரூ.2 கோடி மட்டும் வாங்கிக்கொண்டு திவான் அக்பரை விடுவித்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக முத்தையால்பேட்டை போலீஸ்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் அருண், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர் கார்த்திக் ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் இதுதொடர்பாக அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர்.

கடத்தல் கும்பலை சேர்ந்த சிலர் சென்னை மண்ணடி பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். வீட்டில் இருந்த அரியலூரை சேர்ந்த ஆல்பர்ட் (35) சென்னை தியாகராயநகரைச் சேர்ந்த உமா மகேஸ்வரன்(50) சென்னையைச் சேர்ந்த அகமது மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கடத்தல் சம்பவத்துக்கு முக்கிய மூளையாக செயல்பட்டது தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த தவுபிக் என்பது தெரிய வந்தது. இவர் 2 சமூக அமைப்பை நடத்தி வருகிறார். இவர் மீது மும்பையில் ஒரு வழக்கு மற்றும் தமிழகத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இவர் மீது தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் திருச்சியில் சல்மான் என்பவரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.6 லட்சத்து 70 ஆயிரம் பணம், இவர்கள் பயன்படுத்திய 2 கார்கள் 2 செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. முக்கிய குற்றவாளியான தவுபீக்கை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இந்த வழக்கில் அடையாள அணிவகுப்பு நடைபெற உள்ளதால் குற்றவாளிகள் புகைப்படத்தை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர்.

மேலும் செய்திகள்