கோயம்பேட்டில் ஆம்னி பஸ் கடத்தல்; 2 பேர் கைது

கோயம்பேட்டில் மாயமான ஆம்னி பஸ்சை பெரியபாளையத்தில் போலீசார் மீட்டனர். இது தொடர்பாக பஸ்சை கடத்தியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-08-28 01:48 GMT
பூந்தமல்லி,

நாகை மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 43). இவர் தனியார் டிராவல்ஸ் ஆம்னி பஸ்சில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் ஓட்டும் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஆம்னி பஸ் கோயம்பேடு, நூறடி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது ஆம்னி பஸ் மாயமானது. இதுகுறித்து கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்னி பஸ்சை தேடி வந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே காணாமல் போன அந்த ஆம்னி பஸ் நின்று கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதுதொடர்பாக பஸ்சை கடத்தியதாக பெரியபாளையத்தை சேர்ந்த அருண்குமார்(36), கார்த்திக் (32) ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் ஆம்னி பஸ்சை மீட்டனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட அருண்குமார் தனக்கு சொந்தமாக ஆம்னி பஸ் வேண்டும் என்று பஸ் நிறுவனத்தின் மேலாளர் என அறிமுகமான சந்திரனிடம் ரூ.50 ஆயிரத்தை முன் பணமாக கொடுத்ததாகவும், ஆனால் பஸ்சை வாங்கிக்கொடுக்காமல் அவர் ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அருண்குமார், சந்திரன் நிறுவனத்திற்கு சொந்தமானது என நினைத்து அந்த பஸ்சை கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் மேலாளர் என நம்ப வைத்து மோசடி செய்த சந்திரன் என்பவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்