அரசு உத்தரவை மீறும் நுண் நிதி நிறுவனங்களை கண்டித்து பெண்கள் முற்றுகை போராட்டம் - உதவி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
அரசு உத்தரவை மீறும் நுண் நிதி நிறுவனங்களை கண்டித்து பெண்கள் தர்மபுரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி,
கொரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய, மாநில அரசுகளின் உத்தரவை மீறி தனியார் நுண் நிதி நிறுவனங்கள் கடன் தவணை மற்றும் வட்டியை செலுத்த கோரி மிரட்டல் விடுப்பதை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், நகர்ப்புற வாழ்வாதார கூட்டமைப்பு, தோழி கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில், தர்மபுரி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது. ஜனநாயக மாதர் சங்க மாவட்டசெயலாளர் கிரைசாமேரி தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் ஜெயா, முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் குமார், நகர செயலாளர் ஜோதிபாசு, தோழி கூட்டமைப்பு மாநில அமைப்பாளர் சங்கர், நகர்ப்புற பெண்கள் கூட்டமைப்பு தலைவர் ஆயிஷா ஜாஸ்மீன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அர்ச்சுணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். தொழில்வளர்ச்சி இல்லாத தர்மபுரி மாவட்டத்தில் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த பெண்கள் தனியார் நுண்நிதிநிறுவனங்களிடம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கடன் வாங்கி பெட்டிக்கடை உள்ளிட்ட சிறிய தொழில்களை செய்து வருகிறார்கள்.
கொரோனா ஊரடங்கு காரணமாக இத்தகையவர்கள் நடத்திய தொழில் முடங்கி வருவாய் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. ஆனால் தனியார் நுண்நிதி நிறுவன பிரதிநிதிகள் கடன் தவணையை செலுத்த வலியுறுத்தி பெண்களை மிரட்டுவது, தரக்குறைவாக பேசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் ராமச்சந்திரன், குப்புசாமி, சாமிநாதன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அறிந்த உதவி கலெக்டர் தணிகாசலம், போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகளின் நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வருகிற 31-ந்தேதி நுண்நிதிநிறுவன பிரதிநிதிகள் மற்றும் கடன் பெற்றோர் பங்கேற்கும் கூட்டம் நடத்தப்படும் என்றும் உறுதியளித்தார். இதையடுத்து முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.