கொரோனா தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை: 31-ந்தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரை புதுவையில் 32 இடங்களில் உள்ளூர் ஊரடங்கு - கலெக்டர் உத்தரவு

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக புதுவையில் 32 இடங்களில் வருகிற 31-ந்தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரை உள்ளூர் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்று கலெக்டர் அருண் உத்தர விட்டுள்ளார்.;

Update: 2020-08-28 01:23 GMT
புதுச்சேரி,

புதுவையில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வரும் காலங்களில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

எனவே தொற்று பரவுவதை கட்டுப்படுத்த உள்ளூரில் குறிப்பிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்த புதுவை அரசு முடிவு செய்துள்ளது. அதாவது புதுவையில் ஒரு சில இடங்களில் 7 நாட்கள் முதல் 30 நாட்களுக்குள் பாதிப்பு விகிதம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.

இத்தகைய இடங்களாக 32 பகுதிகள் தற்போது புதுவை அரசால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த இடங்களில் மட்டும் உள்ளூர் ஊரடங்கினை பிறப்பித்து கலெக்டர் அருண் உத்தர விட்டுள்ளார். இதுதொடர்பாக கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள ஊரடங்கு உத்தரவில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் சண்முகாபுரம், தட்டாஞ்சாவடி, குண்டுப் பாளையம், திலாசுப்பேட்டை, தென்றல் நகர், அய்யப்பன் நகர், சக்தி நகர், அனிதா நகர், உழந்தைகீரப்பாளையம் அய்யனார் கோவில் வீதி, தியாகுமுதலியார் நகர், முல்லை நகர், பெரியார்நகர், கங்கையம்மன்கோவில் வீதி, குறிஞ்சிநகர், மடுவுபேட், பெத்துசெட்டிபேட்டை, தில்லை நகர் முதல் வசந்தம் நகர், புதுநகர், கணுவாப்பேட்டை ரோடு ஜங்ஷன், ஆர்.கே.நகர், பிச்ச வீரன்பேட், வாய்க்கால் வீதி (1, 2, 3, 4), ஜே.ஜே.நகர், ரெயின்போ நகர், குமரகுருபள்ளம், கோவிந்தசாலை, செந்தாமரை நகர், சோலைநகர், வைத்திக்குப்பம், முத்தியால்பேட்டையில் முத்தைய முதலியார் வீதி, செயிண்ட் ரொசாரியோ வீதி, காட்டாமணிக்குப்பம் வீதி, உளவாய்க்கால், தர்மாபுரி பெருமாள் கோவில் வீதி, பொறையூர் பேட்-புதுநகர், பங்கூர் பேட் ஆகிய பகுதிகளில் இந்த உள்ளூர் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இந்த பகுதிகளில் வருகிற 31-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 6-ந்தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த பகுதிகளில் உள்ள கடைகள், தொழிற்கூடங்கள், தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டிருக்கவேண்டும்.

இங்குள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை மட்டுமே திறந்திருக்கவேண்டும். அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற பணிகளுக்கு இங்கு அனுமதியில்லை.

இந்த பகுதிகளில் அத்தியவாசிய பணிகளுக்கு தவிர மற்ற பணிகளுக்கு எந்த போக்குவரத்தும் அனுமதிக் கப்படாது. அரசு அலுவலகங்கள், ஆஸ்பத்திரிகள், தனியார் கிளினிக்குகள், மருந்தகங்கள், பால் பூத்துகளுக்கு தடைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அரசுப்பணி, ஆஸ்பத்திரி, தனியார் கிளினிக், மருந்தகம், பால் பூத் பணிகளை தவிர மற்ற பணிகளுக்கு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.

ஊரடங்கு அமல்படுத்தப்படும் பகுதிகளில் சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும். இந்த பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்படும். அனைத்துவிதமான போக்குவரத்தும் நிறுத்தப்படும். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படும். இந்த பகுதிகள் வழியாக முக்கிய சாலைகள் சென்றால் அதில் வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படும்.

இதில் ஏதாவது விதிமுறை மீறல் இருந்தால் பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் தொற்றுநோய் பரப்புதல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் கலெக்டர் அருண் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்