அரியலூர் மாவட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் வழங்கினார்
அரியலூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டரின் தன்விருப்ப நிதியில் இருந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட கலெக்டர் ரத்னா முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில், 67 ஊராட்சிகளுக்கு மின்கலம் மூலம் இயக்கப்படும் மூன்று சக்கர குப்பை வண்டிகள் ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பிலும், மகளிர் திட்டம் சார்பில் நான்கு ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகளுக்கு மொத்தம் ரூ.40 லட்சம் மானியத்தில் வேளாண் எந்திரங்களும் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கலெக்டரின் தன்விருப்ப நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 பேருக்கு இணைப்பு சக்கரங்கள் பொறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களும், 7 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனங்களும், நவீன செயற்கை கை ஒருவருக்கும், 10 பேருக்கு தையல் எந்திரங்களும், 8 பேருக்கு பல்வேறு உதவி திட்டங்களின் கீழ் காசோலைகளும் என மொத்தம் 31 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 93 ஆயிரத்து 200 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சந்திரசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் செந்தமிழ்செல்வி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.