‘அரியர் மாணவர்களின் அரசனே’ முதல்-அமைச்சரை புகழ்ந்து விளம்பர தட்டி போலீசார் அகற்றினார்கள்

ஈரோடு, அரியர் மாணவர்களின் அரசனே என்ற வாசகத்துடன் முதல்-அமைச்சரை புகழ்ந்து வைத்த விளம்பர தட்டியை போலீசார் அகற்றினார்கள்.

Update: 2020-08-27 23:00 GMT
ஈரோடு,

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் நடக்க இருந்த பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதுடன், இந்த தேர்வு எழுத இருந்த அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்ச்சி அடைந்ததாக தமிழக அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து கல்லூரிகளில் அரியர் (தோல்வி அடைந்த) பாடங்களை எழுதுவதற்கு தேர்வுக்கட்டணம் செலுத்தி இருந்தவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார். இது பல ஆண்டுகளாக கல்லூரிகளில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற முடியாமல் இருந்த முன்னாள் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்து உள்ளது. இதை கொண்டாடும் வகையில் ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் நேற்று காலை ஒரு விளம்பர தட்டி வைக்கப்பட்டு இருந்தது. அதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படம் வைத்து ‘அரியர் மாணவர்களின் அரசனே’ என்று அவரை புகழ்ந்து வாசகங்கள் போடப்பட்டு இருந்தன.

மேலும் ஒரு திருக்குறள் வாசகமும், ஐயா எடப்பாடியாரே நீர் வாழ்க வாழ்க என்ற வாசகங்களும் இடம் பெற்று இருந்தன. அரியர் மாணவர்கள் சார்பில் வைக்கப்பட்டு இருந்த இந்த விளம்பர தட்டியை அந்த வழியாக சென்ற பலரும் நின்று பார்த்து படித்து சிரித்துச்சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த சூரம்பட்டி போலீசார் விரைந்து வந்து விளம்பர தட்டியை அங்கிருந்து அகற்றினார்கள். இதற்கிடையே இந்த விளம்பர தட்டி படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்