தெற்கு கள்ளிகுளம் பனிமய மாதா மலைக்கு சாலை வசதி இன்பதுரை எம்.எல்.ஏ. ஆய்வு

தெற்கு கள்ளிகுளம் பனிமய மாதா மலைக்கு சாலை அமைக்கும் பணிகளுக்கான இன்பதுரை எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2020-08-27 22:30 GMT
நெல்லை,

ராதாபுரம் தொகுதி தெற்கு கள்ளிகுளத்தில் பிரசித்தி பெற்ற பனிமயமாதா ஆலயம் உள்ளது. இந்த தேவாலயத்தின் அருகே அமைந்துள்ள சிறிய மலை மீது தேவமாதா பக்தர்களுக்கு காட்சி கொடுத்த போது மாதாவின் பாதங்கள் மலை மீது பதித்து உள்ளது. தற்போது மலை மீது காணப்படும் கால் தடத்தை மாதாவின் கால்தடம் என அங்குள்ள மக்கள் நம்புகிறார்கள்.

இதுதொடர்பாக சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது இன்பதுரை எம்.எல்.ஏ. பேசுகையில், தெற்கு கள்ளிகுளம் பனிமய மாதா ஆலயத்தை தமிழக அரசு, சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து தமிழக அரசு அதற்கான அரசாணை பிறப்பித்து, சுற்றுலா தலமாக அறிவித்தது.

இந்த அறிவிப்பின் மூலமாக தெற்கு கள்ளிகுளத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.80 லட்சம் மதிப்பில் செய்து முடிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் பனிமய மாதா பாதம் பட்ட மலைக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அங்கு சாலை அமைக்கும் பணிகளுக்கான ஆய்வினை இன்பதுரை எம்.எல்.ஏ. தலைமையில், மாவட்ட சுற்றுலா துறை அதிகாரி சீதாராமன், உதவி சுற்றுலா அதிகாரி நித்ய கல்யாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிஷோர்குமார், கோபாலகிருஷ்ணன், உள்ளாட்சி துறை பொறியாளர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, பனிமய மாதா தேவாலயத்தின் முன்னாள் தர்மகர்த்தா ஆனந்த ராஜா, அ.தி.மு.க. நிர்வாகி அருண் புனிதன், கிளை செயலாளர் ராஜன், சொசைட்டி தலைவர் முருகேசன், லாரன்ஸ் மணி, ஜூலி, ஜெய்சிங், வில்லியம், எடிசன், ஜார்ஜ் மரியராஜ், அருண்குமார், முல்லை ரஸ்வின், நேவிசன், சந்திரமோகன், கபாலி ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து ராதாபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பிரிவில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு இன்பதுரை எம்.எல்.ஏ. பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார். தனது சொந்த நிதியில் அமைக்கப்பட்ட ஜெனரேட்டர் வசதியையும் தொடங்கி வைத்து, ஆஸ்பத்திரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டினார். இதில் ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் மாதவன் பிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்