கன்னிவாடி போலீஸ் நிலையம் அருகே துணிகரம்: வாகன சோதனையில் ஈடுபட்ட ஏட்டுக்கு பட்டாக்கத்தி வெட்டு - வாலிபர் கைது-நண்பருக்கு வலைவீச்சு

கன்னிவாடி போலீஸ் நிலையம் அருகே, வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு பட்டாக்கத்தியால் வெட்டப்பட்டார். இதில் தொடர்புடைய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவருடைய நண்பரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-;

Update: 2020-08-27 07:00 GMT
கன்னிவாடி,

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி போலீஸ் நிலையம் அருகே, நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பிரமணியன், ஏட்டுகள் வேலுச்சாமி, திருப்பதி (வயது 40) ஆகியோர் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக முக கவசம் அணியாமல் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

அவர்களை பார்த்ததும், மோட்டார் சைக்கிளை நிறுத்தும்படி போலீசார் சைகை செய்தனர். ஆனால் அவர்கள், அந்த இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சிறிது தூரம் சென்று நிறுத்தினர். இதனையடுத்து ஏட்டு திருப்பதி மட்டும் அங்கு சென்று, அவர்களிடம் விசாரித்தார். முக கவசம் ஏன் அணியவில்லை என்றும், எங்கிருந்து வருகிறீர்கள் என்றும் அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் அவர்கள் மீது திருப்பதிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

மேலும் மோட்டார் சைக்கிளில் தொங்கவிடப்பட்டிருந்த பையை திறந்து காட்டும்படி திருப்பதி கூறினார். அப்போது, மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர், அதில் துணிமணிகள் தான் இருக்கிறது என்றார். இருப்பினும் அந்த பையை சோதனையிட திருப்பதி முயன்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், பைக்குள் இருந்து ஒரு பட்டாக்கத்தியை திடீரென எடுத்து திருப்பதியை சரமாரியாக வெட்டினார். இதில் திருப்பதியின் கை, தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கிடையே அந்த வாலிபர், அருகே உள்ள தோணிமலை பகுதிக்குள் தப்பி ஓடி விட்டார்.

இதேபோல் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரும் அங்கிருந்து தோணிமலையை நோக்கி ஓடினார். இதனைக்கண்ட சக போலீசார், மலையடிவாரத்தில் அவரை விரட்டி பிடித்தனர். மேலும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு அசோகன், கன்னிவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட வாலிபர், மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கோட்டநத்தம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (22) என்று தெரியவந்தது.

திருப்பதியை வெட்டிவிட்டு தப்பியோடியவர், மணிகண்டனின் நண்பர் முத்துலிங்கம் (22) ஆவார். இவரும், கோட்டநத்தம்பட்டியை சேர்ந்தவர் தான். மதுரையில் இருந்து நத்தம் வந்த இவர்கள் திண்டுக்கல், கன்னிவாடி வழியாக ஒட்டன்சத்திரம் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே அவர்கள் கொண்டு வந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதற்குள் 4 கத்திகள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கத்திகளுடன் அவர்கள் எதற்காக ஒட்டன்சத்திரத்துக்கு சென்றார்கள்? என்பது குறித்து மணிகண்டனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதற்கு அவர், மோட்டார் சைக்கிளில் இருந்த பை முத்துலிங்கத்துடையது என்றும், அதில் என்ன இருந்தது என்பது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் போலீசாரிடம் தெரிவித்தார்.

ஒட்டன்சத்திரம் வரை சென்று வர வேண்டும் என்று தன்னிடம் கூறியதால், அவருடன் வந்ததாக மணிகண்டன் போலீசாரிடம் கூறினார். இந்த சம்பவம் குறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய முத்துலிங்கத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டாக்கத்தி வெட்டில் படுகாயமடைந்த திருப்பதி, சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர்.

பின்னர் அவர்கள் திருப்பதியிடம் நலம் விசாரித்ததோடு, நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். மேலும் திருப்பதிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர். வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு பட்டாக்கத்தியால் வெட்டப்பட்ட துணிகர சம்பவம், திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்