பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
தேனி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 40). கட்டிட தொழிலாளி. இவர், கடந்த 2013-ம் ஆண்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் தங்கி இருந்து, டி.சுப்புலாபுரத்தில் நடந்த ஒரு கட்டிட கட்டுமான பணியில் ஈடுபட்டார்.
அப்போது மறவப்பட்டியை சேர்ந்த திருமணம் ஆகாத 28 வயது இளம்பெண் ஒருவர், அங்கு கட்டுமான கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அந்த பெண்ணுக்கும், பொன்ராஜிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர், திருமண ஆசை காட்டி பொன்ராஜ் நெருங்கி பழகியதால் அந்த பெண் கர்ப்பம் ஆனார். இதையடுத்து பொன்ராஜ் அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றி சென்று விட்டார்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பெண் 6 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்ராஜை கைது செய்தனர். இந்த வழக்கு, தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராஜராஜேஸ்வரி ஆஜராகி வாதாடினார்.
வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் குழந்தைக்கும், பொன்ராஜிக்கும் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவில், அந்த குழந்தை பொன்ராஜ் மூலம் பிறந்தது தான் என்பது உறுதியானது. இதையடுத்து இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி கீதா நேற்று தீர்ப்பு கூறினார்.பெண்ணை கர்ப்பிணியாக்கி ஏமாற்றிய பொன்ராஜிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அபராத தொகையில் ரூ.50 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவருடைய குழந்தையின் பராமரிப்பு செலவுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இதையடுத்து பொன்ராஜை போலீசார் அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொன்ராஜ், ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.