இ-பாஸ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இ-பாஸ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டிசம்பர் மாதம் வரை ரேஷன் கடைகளில் இலவசமாக அனைத்து பொருட்களும் வழங்கிட வேண்டும். இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். பஸ் போக்குவரத்தை படிப்படியாக தொடங்கிட வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மத்திய அரசு ரூ.7,500 வழங்கிட வேண்டும்.
காய்ச்சல், சளிக்கு சிகிச்சை அளிக்க கடலூர் நகரில் அனைத்து வார்டுகளிலும் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 26-ந் தேதி (அதாவது நேற்று) மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்து இருந்தனர்.
அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று காலை 11 மணிக்கு கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மருதவாணன், நகர செயலாளர் அமர்நாத், வக்கீல் ஜோதிலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதேபோல் கடலூர் நகரத்தில் மேலும் 30 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்புராயன், மாவட்ட குழு உறுப்பினர் பாஸ்கரன், நகர குழு உறுப்பினர்கள் பால்கி, செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில் நகர குழு உறுப்பினர் சங்கர் தலைமையிலும், சரவணா தியேட்டர் எதிரில் நடராஜன் தலைமையிலும், அம்பேத்கர் சிலை எதிரில் ஜீவானந்தம் தலைமையிலும், சுபாஷினி மஹால் அருகில் தினேஷ் தலைமையிலும், தபால் அலுவலகம் எதிரில் ராஜேந்திரன் தலைமையிலும் ,பி.டி.எஸ். மணிநகரில் ராஜேந்திரன் தலைமையிலும், எல்.ஐ.சி. அலுவலகம் எதிரில் தேவராஜீலு தலைமையிலும், லிங்க் ரோட்டில் ஜீவா தலைமையிலும், ஹவுசிங் போர்டில் மகாலட்சுமி தலைமையிலும், பக்கிரிப்பாளையத்தில் வசந்தா தலைமையிலும், வி.ஆண்டிக்குப்பத்தில் முகமது நிஜார் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதுதவிர சிதம்பரம், விருத்தாசலம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.