சிவகாசியில், தாமதமாக தொடங்கிய காலண்டர் தயாரிப்பு - பணியாட்கள் பற்றாக்குறை

சிவகாசி பகுதியில் தாமதமாக காலண்டர் தயாரிப்பு பணி தொடங்கி உள்ள நிலையில் போதிய பணியாட்கள் இல்லாததால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2020-08-27 05:45 GMT
சிவகாசி,

சிவகாசி பகுதியில் தினசரி மற்றும் மாத காலண்டர் தயாரிக்கும் பணியில் வழக்கமாக 50-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் ஈடுபடும். ஒவ்வொரு ஆண்டும் 3-வது மாதத்தில் சிவகாசியில் உள்ள அச்சகங்களில் அடுத்த ஆண்டுக்குரிய காலண்டர் தயாரிப்பு தொடங்கும். ஆடி 18 அன்று வெளி மாநில மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் மொத்த வியாபாரிகளுக்கு அடுத்த ஆண்டுக்குரிய புதிய டிசைன் காலண்டர்கள் பார்வைக்கு வழங்கப்படும்.

இதை பெற்றுக்கொள்ளும் மொத்த வியாபாரிகள் புதிய ஆர்டர்களை எடுத்து சிவகாசியில் உள்ள அச்சகங்களுக்கு வழங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் தொடங்கி விட்டதால் அச்சகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தொழில் முற்றிலுமாக முடங்கியது. அதன் பின்னர் 2 மாதம் கழித்து அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அதன் பின்னர்தான் சில அச்சகங்கள் முதல்கட்ட பணிகளை தொடங்கின.

கடந்த காலங்களில் ஆகஸ்டு மாதங்களில் 30 சதவீதம் ஆர்டர்கள் தயாரித்து தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கும். ஆனால் தற்போது தான் சிவகாசியில் உள்ள அச்சகங்களில் காலண்டர் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளது. தாமதமாக தொடங்கப்பட்டதால் கடந்த காலங்களில் நடந்த உற்பத்தி இந்த ஆண்டு இருக்காது என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் கற்பகா ஜெயசங்கர் கூறியதாவது:- சிவகாசியில் வழக்கமாக காலண்டர் தயாரிப்புக்கான முதல் கட்ட பணிகள் மார்ச் மாதம் தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் அந்த பணி முழுமையாக தொடங்கவில்லை. தற்போது தான் தொடங்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளாக பின்பற்றி வந்த நடைமுறையைக்கூட இந்த ஆண்டு கடைபிடிக்க முடியாத ஒரு நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்.

எங்களது முகவர்களுக்கு புதுடிசைன் குறித்த ஆல்பம் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 18-ந்தேதி பூஜைக்கு பின்னர் வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அந்த நடைமுறையை கடைபிடிக்க முடியாமல் போனது. வெளியூர் முகவர்கள் சிவகாசிக்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. அரசு அறிவித்த விதிமுறைகளை நாங்கள் கடைபிடித்து வருகிறோம். அதனாலேயே தாமதமாக காலண்டர் உற்பத்தியை தொடங்க வேண்டி உள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் 50 சதவீத தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. தற்போது 75 சதவீத தொழிலாளர்களை கொண்டு காலண்டர்களை உற்பத்தி செய்யலாம் என்று அறிவித்துள்ளது. நோய்கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் தொழிலாளர்களை பணிக்கு அழைக்க முடியாத நிலை உள்ளது.

சிவகாசியில் தற்போது வரை 5 பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன. தற்போது உள்ள சூழ்நிலையில் 100 சதவீத தொழிலாளர்களை கொண்டு காலண்டர் உற்பத்தியில் ஈடுபட்டால் மட்டுமே வழக்கமான உற்பத்தியில் 70 சதவீத உற்பத்தியை அடைய முடியும்.

100 சதவீத தொழிலாளர்களுக்கு அனுமதி இல்லை என்றால் 70 சதவீதம் கூட இந்த ஆண்டு உற்பத்தி இருக்காது. மற்ற பொருட்களை போல் இணையத்தில் பார்த்து காலண்டருக்கு ஆர்டர் எடுக்க முடியாது. நேரில் வந்து பார்த்து ஆர்டர் கொடுக்கும் மனநிலையில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் உள்ளனர்.

அதனால் தற்போது உள்ள இ-பாஸ் பிரச்சினை இல்லாமல் இருக்க வேண்டும். மேலும் பொதுபோக்குவரத்துக்கு அனுமதி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் முகவர்களும், வர்த்தக உரிமையாளர்களும் காலண்டர் ஆர்டர் கொடுக்க சிவகாசிக்கு வருவார்கள். மொத்தத்தில் தற்போது உள்ள நிலையில் போதிய கால அவகாசம் இல்லாத நிலையும், தொழிலாளர்கள் பற்றாக்குறையும் இருப்பதால் வழக்கமான உற்பத்தி இந்தஆண்டு இருக்காது. 2021-ல் தமிழக சட்டமன்ற தேர்தல் இருப்பதால் அரசியல் பிரமுகர்களின் ஆர்டர்கள் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்