வேலூர், திருவண்ணாமலையில் 3 பெண்கள் உள்பட 8 பேர் கொரோனாவுக்கு பலி
வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு சிகிச்சைபெற்றுவந்த 3 பெண்கள் உள்பட 8 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்தனர்.;
வேலூர்,
வேலூர், திருவண்ணாமலைமாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தொற்று பாதித்த நபர்களுக்கு தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலூர் தனியார் மருத்துவமனையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் என 1,000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது போன்று தொற்றால் உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிமாகி கொண்டே செல்கிறது. வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வியாபாரி உள்பட 6 பேர், திருவண்ணாமலையில் 2 பேர் என 8 பேர் நேற்று ஒரே நாளில் இறந்துள்ளனர்.
அவர்களின் விவரம் வருமாறு:-
வேலூர் சேண்பாக்கம் நேதாஜிரோட்டை சேர்ந்தவர் செல்வராஜூ (வயது 67), மளிகை வியாபாரி. இவர் கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று பலனின்றி உயிரிழந்தார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் அண்ணாநகரை சேர்ந்த அண்ணாமலை (61) என்பவர் கடந்த 11-ந் தேதியும், ராணிப்பேட்டையை சேர்ந்த தரணி என்பவர் நேற்று காலையும், சேலம் மாவட்டம் சின்னதிருப்பதியை சேர்ந்த அல்மாஸ் பர்வீன் (42) என்ற பெண் கடந்த 13-ந் தேதியும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 3 பேரும் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துவிட்டனர்.
இதேபோன்று கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆந்திரமாநிலம் சித்தூர் ராம்நகர்காலனியை சேர்ந்த ஜெகதாம்பா (50), கடப்பா சங்கரபாளையத்தை சேர்ந்த நாராயணா (62) ஆகியோர் கடந்த 12-ந் தேதி இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் 2 பேரும் நேற்று உயிரிழந்தனர்.
திருவண்ணாமலையை சேர்ந்த 60 வயது பெண் உடல் நலக்குறைவால் காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிகிச்சையில் இருந்த அவர் உயிரிழந்தார். இதேபோல செய்யாறை சேர்ந்த 65 வயது முதியவர் செய்யாறு அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்தார். அவரும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதன்மூலம் வேலூர் திருவண்ணாமலையில் 3 பெண்கள் உள்பட 8 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 58 பேர் பாதிக்கப்பட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,680 ஆக உயர்ந்துள்ளது.