பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி கொரோனா வார்டில் கிரிக்கெட் விளையாடி, ஆடி பாடிய நோயாளிகள் - சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் பரபரப்பு

பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் கொரோனா வார்டில் நோயாளிகள், ஊழியர்கள் கிரிக்கெட் விளையாடி, ஆடி பாடிய மற்றும் கிரிக்கெட் விளையாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-08-26 22:00 GMT
கிருஷ்ணகிரி,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. ஏழை, பணக்காரன் என யாரையும் விட்டு வைக்காமல் கொரோனாவால் ஏராளமானோர் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். மேலும் கொரோனாவுக்கு ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், கொரோனா வார்டில் நோயாளிகள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் ஊழியர்கள் நடிகர் கமலஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் வரும் “அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ“ என்ற பாடலை செல்போனில் பாடவிட்டு நடனம் ஆடினர்.

இதேபோல் மேலும் சிலர் கொரோனா வார்டிலேயே கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்