சேலம் மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 451 பேருக்கு கொரோனா - நாமக்கல்-70, தர்மபுரி-29, கிருஷ்ணகிரி-31
சேலம் மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 451 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல நாமக்கல்லில் 70 பேருக்கும், தர்மபுரியில் 29 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 31 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களாக 250-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 297 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 451 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இது தான் மாவட்டத்தில் ஒரே நாளில் அதிக பாதிப்பாகும்.
அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 291 பேர், ஆத்தூரில் 48 பேர், வீரபாண்டியில் 16 பேர், சங்ககிரியில் 14 பேர், சேலம் ஒன்றியத்தில் 12 பேர், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா 8 பேர், மகுடஞ்சாவடியில் 7 பேர், எடப்பாடி, வாழவந்தி ஆகிய பகுதிகளில் தலா 6 பேர், மேட்டூரில் 5 பேர், ஓமலூரில் 4 பேர், கொங்கணாபுரம், பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், பனமரத்துப்பட்டியில் 2 பேர், அரியபாளையம், மேச்சேரி, வடுகப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் என கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த 3 பேரும், விழுப்புரத்தில் இருந்து சேலம் வந்த ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 966 ஆக உயர்ந்துள்ளது. சேலத்தில் மேலும் 2 பயிற்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது பரிசோதனையில் தெரியவந்ததால் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த 222 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 1,672 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டத்தை சேர்ந்த 3 பேரின் பெயர் அந்தந்த மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1669 ஆக குறைந்தது. இந்த நிலையில் நேற்று பள்ளிபாளையம் அரசு பள்ளி ஆசிரியை மற்றும் 3 போலீஸ்காரர்கள் உள்பட 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் நேற்று பள்ளிபாளையத்தை சேர்ந்த 13 பேர், நாமக்கல்லை சேர்ந்த 12 பேர், குமாரபாளையத்தை சேர்ந்த 9 பேர், பாண்டமங்கலத்தை சேர்ந்த 7 பேர், திருச்செங்கோட்டை சேர்ந்த 3 பேர், மல்லசமுத்திரம் மற்றும் ராசிபுரத்தை சேர்ந்த தலா 2 பேர், சேலம், சென்னையை சேர்ந்த 2 பேர் உள்பட 70 பேருக்கு தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,739 ஆக அதிகரித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் பொம்மிடியை சேர்ந்த 25 வயது ராணுவவீரர் வடமாநிலத்தில் பணிபுரிந்த வந்தார். சமீபத்தில் பொம்மிடி வந்த அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவரை தனிமைப்படுத்தி பரிசோதித்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. தர்மபுரியை சேர்ந்த 52 வயது மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர், கோட்டை கோவில் தெரு பகுதியை சேர்ந்த 36 வயது ஆசிரியர், 31 வயது நிதிநிறுவன ஊழியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. குமாராசாமிப்பேட்டை பகுதியை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதேபோல் சோமனஅள்ளியை சேர்ந்த 26 வயது தபால் ஊழியர், பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த 47 வயது கேபிள் டி.வி. ஆபரேட்டர், 33 வயது தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளர் உள்பட 29 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இவர்கள் அனைவரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களையும் சேர்த்து தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,156 ஆக உயர்ந்து உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி, நேற்று ஒருநாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. அதன்படி ஓசூர் பகுதியில் 19 பேருக்கும், கிருஷ்ணகிரி பகுதியில் 9 பேருக்கும், ஊத்தங்கரை பகுதியில் 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரி, ஓசூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களையும் சேர்த்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,960 ஆக உயர்ந்துள்ளது.