முத்துப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு

முத்துப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.

Update: 2020-08-26 22:30 GMT
முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சித்தேரி கிராமத்தை சேர்ந்த வடிவேல் மகன் ஆனந்த்(வயது 32). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி முத்துப்பேட்டை அருகே உள்ள பெத்தவேளாண் கோட்டகம் கிராமத்தை சேர்ந்த நாகராஜன் மகள் அனிதா(30). இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது.

குழந்தை பிறந்ததில் இருந்து ஆனந்த், பெத்தவேளாண் கோட்டகத்தில் தனது மாமனார் வீட்டிலேயே தங்கி அந்த பகுதியில் எலக்ட்ரீசியன் வேலைகளுக்கு சென்று வந்தார். வருகிற 30-ந் தேதி இவருக்கு 2-வது ஆண்டு திருமண நாளாகும்.

இந்த நிலையில் நேற்று மதியம் தனது குழந்தைக்கு முத்துப்பேட்டையில் இருந்து நடைவண்டி வாங்கி வந்து கொடுத்து வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒருவருடைய வீட்டில் மின் பழுது ஏற்பட்டது. இதையடுத்து ஆனந்த் அங்கு சென்று மின்பழுதை சரி செய்ய முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆனந்தை, உறவினர்கள் மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீசார் அங்கு சென்று ஆனந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்