பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ. பொதுமக்கள் கடும் அதிருப்தி

தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு உள்ளார். இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.;

Update: 2020-08-26 22:45 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 50 பேருக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அரசின் உத்தரவை மீறி மக்கள் பிரதிநிதிகளே பல்வேறு நிகழ்ச்சிகளை கொண்டாடி வருகின்றனர். இதுபோல சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர் தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் அருண்குமார் பூஜார். இவருக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் ஆகும். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு வைத்து அருண்குமார் பூஜார் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அருண்குமார் பூஜார் எம்.எல்.ஏ. முக கவசம் அணியவில்லை. இதில் கலந்து கொண்ட அருண்குமார் பூஜார் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களும் முக கவசம் அணியவில்லை. சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்கவில்லை.

இதனை அருண்குமார் பூஜார் எம்.எல்.ஏ.வும் கண்டுகொள்ளவில்லை. அவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் தொண்டர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

இந்த வீடியோக்களை பார்த்த பொதுமக்கள் அரசின் உத்தரவு எல்லாம் பொதுமக்களுக்கு தான் பொருந்துமா?, அரசியல் கட்சியினருக்கு பொருந்தாதா? என்று கருத்து பதிவிட்டு தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்