கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கியது மின்வாரிய அதிகாரி உள்பட 116 பேருக்கு தொற்று

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கியது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் மின்வாரிய செயற் பொறியாளர் உள்பட 116 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.;

Update: 2020-08-26 07:50 GMT
வேலூர், 

வேலூர் தொரப்பாடி துணை மின்நிலையத்தில் பணிபுரியும் இளநிலை செயற் பொறியாளருக்கு கடந்த சில நாட்களாக சளி, இருமல் அறிகுறி காணப்பட்டன. அதையடுத்து அவருக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டன. அதன் பரிசோதனை முடிவில் இளநிலை செயற் பொறியாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் என்ஜினீயர் பிரிவில் பணிபுரிந்த ஊழியர் ஒருவருக்கும், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் பணியாற்றும் 2 காவலர்கள் மற்றும் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைப்பதற்காக கொண்டு வரப்பட்ட வாலிபருக்கும் சளிமாதிரி சேகரிக்கப்பட்டதில் கொரோனா உறுதியானது.

கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கியது

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த 2 நர்சுகள், காவலாளி மற்றும் அங்கு சிகிச்சை பெற்று வந்த வடமாநிலத்தை சேர்ந்த 2 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 32 வயது பெண் டாக்டர், பெண் ஊழியர், காய்கறி வியாபாரிகள், கடை வியாபாரிகள், 3 கட்டிட மேஸ்திரிகள், ஆட்டோ டிரைவர், தோட்டப்பாளையத்தில் 10 வயது சிறுமி, சத்துவாச்சாரியில் 75 வயது முதியவர், காந்திநகரில் 78 வயது மூதாட்டி உள்பட மாவட்டம் முழுவதும் 116 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதுவரை 9,887 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்