பணிமனைகள் முன்பு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டத்தில் பணிமனைகள் முன்பு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-08-26 04:28 GMT
தேனி, 

அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களிடம் ஊரடங்கு காலத்தில் பிடித்தம் செய்த ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும், தனியார் பஸ்களை வாடகைக்கு எடுக் கும் முடிவை கைவிட வேண்டும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகள் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதன்படி, தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., எல்.பி. எப். உள்ளிட்ட தொழிற்சங்கங் களை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு எல்.பி. எப். தொழிற்சங்க கிளை செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். இதில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

கம்பம்

கம்பம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணா தொழிற்சங்கத்தை தவிர்த்து மற்ற அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல், பெரியகுளம், போடி, தேவாரம், உத்தமபாளையம், லோயர்கேம்ப் ஆகிய இடங்களில் உள்ள பணிமனைகள் முன்பும் போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்