கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் சாவு மேலும் 237 பேருக்கு தொற்று உறுதி
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 237 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 5 ஆயிரத்து 441 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 4 ஆயிரத்து 837 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் நேற்று சிலரது கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் 52 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5493 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற வந்த திருநாவலூரைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்தது.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 6,213 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 62 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 5,332 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 819 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செஞ்சியை சேர்ந்த 55 வயதுடையவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரின் இறப்பு விவரத்தை நேற்று விழுப்புரம் மாவட்ட இறந்தவரின் பட்டியலோடு சுகாதாரத்துறை சேர்த்தது. இதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.
185 பேருக்கு தொற்று
இதனிடையே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 500-க்கும் மேற்பட்டோரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 3 டாக்டர்கள், திருவெண்ணெய்நல்லூர் அரசு மகளிர் பள்ளி ஆசிரியர், புதுக்குப்பம் அரசு பள்ளி ஆசிரியர், கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் 2 போலீஸ்காரர்கள், திண்டிவனம் போலீஸ்காரர், கொட்டியாம்பூண்டி தபால்காரர் உள்ளிட்ட 185 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,398 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 60 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.