பண்ருட்டி தொகுதி சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை
பண்ருட்டி தொகுதி சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பண்ருட்டி,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கொரோனா என்ற வார்த்தையை கேட்டாலே, மனிதகுலம் ஒட்டுமொத்தமாக அஞ்சி நடுங்குகிற நிலையை இன்றைய தினத்தில் பார்க்க முடிகிறது. அதற்கு காரணம், அமைச்சர்கள், எம்.பி., எல்.எல்.ஏ.க்கள், நடிகர்-நடிகைகள் என பெரிய பெரிய பிரபலங்கள் எல்லாம் ஓசைப்படாமல் கொரோனா தொற்றுக்கு ஆளாவதும், சிகிச்சைகள் நீள்வதும், சிலர் மரணம் அடைவதும் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறது.
அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள் பாதிப்பு
தமிழகத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் வரிசையாக தொற்று பாதிப்புக்கு ஆளாகினர். அவர்களுடைய குடும்பத்தில் சிலரும் பாதிக்கப்பட்டனர். பின்னர் சிகிச்சைக்கு பிறகு அனைவரும் குணம் அடைந்தனர். இதேபோல் எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு(உளுந்தூர்பேட்டை), செஞ்சி மஸ்தான்(செஞ்சி), வசந்தம் கார்த்திகேயன்(ரிஷிவந்தியம்), கணேசன்(திட்டக்குடி) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-
பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், அ.தி.மு.க. மகளிரணி துணை அமைப்பாளராகவும் இருப்பவர் சத்யா பன்னீர்செல்வம் (வயது 42). இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வந்தார். மேலும் கட்சி சார்பில் நடந்த ஆய்வு பணியிலும் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா அறிகுறி தென்பட்டதால், உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை
பின்னர் அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே நேற்று வெளியான பரிசோதனை முடிவில் சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வுக்கும், அவரது குடும்பத்தினர் 3 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வும், அவரது குடும்பத்தினர் 3 பேரும், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2-வது எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் ஆவார். ஏற்கனவே தி.மு.க. எம்.எல்.ஏ. கணேசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.