கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 400 படுக்கைகள் - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உத்தரவு

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 400 படுக்கைகள் அமைக்க அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உத்தரவிட்டார்.

Update: 2020-08-26 00:04 GMT
புதுச்சேரி,

புதுவையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக பலர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக படுக்கைகள் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் கூடுதலாக 100 படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் அவர் அங்குள்ள கல்லூரியின் மாணவர் விடுதியையும் பார்வையிட்டார். அங்கும் 300 படுக்கைகள் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் இடத்தில் ஆய்வு நடத்திய அமைச்சர், மக்களை காத்திருக்க வைக்காமல் உடனடியாக பரிசோதனை நடத்தி சோதனை முடிவுகளை தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கு மறுநாளே பரிசோதனை முடிவுகள் தெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த சில நாட்களில் 2 ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரம் பேர் வரை சோதனை நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். சோதனை அதிகரிக்கும்போது தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

அதாவது நாள் ஒன்றுக்கு 1,000 பேர் வரை பாதிப்பு கண்டறியப்படலாம். அதற்கு தேவையான அளவுக்கு படுக்கை வசதி செய்யவேண்டி உள்ளது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி உள்ளேன்.

தற்போது மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் விடுமுறையில் இருப்பதால் அவர்கள் தங்கியிருக்கும் அறையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். பிற பள்ளி, கல்லூரிகளில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க போதிய கழிப்பறை வசதியில்லை. ஆனால் இங்கு போதுமான வசதி உள்ளது.

இப்போது நமக்கு தேவை சுகாதார பணியாளர்கள்தான். ஏற்கனவே வேலையை விட்டு நிறுத்தப்பட்ட துப்புரவு பணியாளர்களை மீண்டும் பணிக்கு அழைக்க கூறி உள்ளேன். இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.

மேலும் செய்திகள்