மன்னார்குடியில் தனியார் நிதி நிறுவன அதிகாரி வீட்டில் 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
மன்னார்குடியில், தனியார் நிதி நிறுவன அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 2 கிலோ வெள்ளி பொருட்கள் உள்பட ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சுகுமார்(வயது 50). இவர், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் மன்னார்குடியில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சுகுமாரின் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டை பூட்டிவிட்டு மன்னார்குடியை அடுத்த மகாதேவபட்டினத்தில் உள்ள தங்களின் மற்றொரு வீட்டிற்கு சென்று இருந்தனர். நேற்று காலை மன்னார்குடியில் உள்ள இவர்களது வீட்டின் அக்கம் பக்கத்தினர் சுகுமார் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர்.
2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
தகவல் அறிந்து சுகுமாரின் மனைவி வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டிற்குள் இருந்த பீரோ மற்றும் பூஜையறை அலமாரி கதவுகள் திறக்கப்பட்டு பொருட்கள் கலைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சுகுமாரின் மனைவி மற்றும் குழந்தைகள் வெளியூர் சென்றதை தெரிந்து கொண்ட மர்ம மனிதர்கள் இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வீட்டில் இருந்த 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள புதிய கைக்கடிகாரம், ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள டிஜிட்டல் கேமரா, 4 பட்டுப்புடவைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்ற பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து போலீசார் மறறும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.