‘உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன் கடவுளின் குழந்தை’ பேரிடர் மீட்பு படை அதிகாரி மகிழ்ச்சி

மகாடில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த துயர சம்பவத்தில், உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன் கடவுளின் குழந்தை என பேரிடர் மீட்பு படை அதிகாரி மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2020-08-25 23:15 GMT
மும்பை,

மராட்டியத்தில் ராய்காட் மாவட்டம் மகாடில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த துயர சம்பவத்தில், இடிபாடுகளில் இருந்து 19 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 4 வயது சிறுவன் முகமது நதீம் பங்கி மீட்கப்பட்டான். அவனை மீட்பு படையினர் மீட்டு கொண்டு வந்தபோது, அங்கு கூடியிருந்தவர்கள் பலர், ‘கணபதி பப்பா மோரியா' என்ற விநாயகர் சதுர்த்தி பக்தி முழக்கத்தை சொல்லி மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் சிறுவனின் 30 வயது தாய் மற்றும் இரண்டு சகோதரிகள் பிணமாக மீட்கப்பட்டனர். சிறுவனின் தந்தை நதீம் பங்கி துபாயில் வேலை செய்து வந்தார். கட்டிட விபத்தை கேள்வி பட்டதும் மனைவிக்கு போன் செய்து பார்த்தார். ஆனால் தொடர்பு கொள்ள முடியாததால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக புறப்பட்டு நேற்று பிற்பகல் மகாட் வந்து சேர்ந்தார். தனது மகன் உயிருடன் மீட்கப்பட்டதை கண்டு மகிழ்ச்சி அடைந்த அவர், மனைவி, மகள்கள் பிணமாக மீட்கப்பட்டதை கண்டு வேதனையில் துடித்தார்.

இதற்கிடையே உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன் முகமது நதீம் பங்கி கடவுளின் குழந்தை என்று மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் டைரக்டர் ஜெனரல் எஸ்.என். பிரதான் டுவிட்டரில் பதிவிட்டார். அதில், “அதிசய குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு உள்ளது. கடவுளின் குழந்தை. மீட்பு பணி தொடர்கிறது. மேலும் அதிசயம் நடக்க பிரார்த்தனை செய்வோம்” என்று தெரிவித்து இருந்தார்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்: மகாட் கட்டிட விபத்தில் இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். இந்தநிலையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர், காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்து உள்ளது.

இதுகுறித்து மாநில மந்திரி விஜய் வடேட்டிவார் கூறுகையில், "உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும்’’ என்றார்.

மேலும் செய்திகள்