பெரம்பலூர், தா.பழூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பெரம்பலூர், தா.பழூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் பணியை புறக்கணித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொள்ளாமல் ஊரக வளர்ச்சித்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மத்திய அரசு திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நிற்பந்தம் செய்வதை கைவிட வேண்டும். ஜாக்டோ- ஜியோ வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள குற்ற குறிப்பாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை பிரிவு, தேர்தல் அலுவலக பிரிவு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களான 79 பெண்கள் உள்பட 191 பேர் தங்களது பணியை புறக்கணித்து, இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் அந்த சங்கத்தினர் உடையில் கருப்பு பட்டை அணிந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் மரியதாஸ், பொருளாளர் அறிவழகன், இணைச்செயலாளர் லெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தா.பழூரில்...
இதேபோல் குன்னம் அருகே வேப்பூர் ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்திற்கு வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபால், சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் 16 பெண்கள் உள்பட 48 அலுவலர்கள் கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 6 மணி வரை நடைபெற்றது.
அதே கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், இளநிலை உதவியாளர்கள், பதிவு அறை எழுத்தர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர். தா.பழூரில் தொடர்ந்து இன்றும்(புதன்கிழமை) உள்ளிருப்பு போராட்டம் நடைபெறுகிறது.