தூண்டில் வளைவு அமைக்கக்கோரி இரயுமன்துறையில் நள்ளிரவு வரை நீடித்த மீனவர்கள் போராட்டம் - அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வி
இரயுமன்துறையில் தூண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
நித்திரவிளை,
இரயுமன்துறை பகுதியில் அடிக்கடி கடல் சீற்றம் ஏற்பட்டு வருகிறது. கடலில் ராட்சத அலைகள் எழுந்து கரையை தாண்டி ஊருக்குள் புகுந்து மிகுந்த சேதத்தை ஏற்படுத்துகிறது. மேலும், கடலரிப்பு ஏற்பட்டு கரையோர பகுதியில் உள்ள பல வீடுகள் இடிந்து வருகின்றன. எனவே, இந்த பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்தநிலையில், இரயுமன்துறை கிராமத்தில் 3 தூண்டில் வளைவுகள் அமைத்து கிராமத்தை பாதுகாக்க வேண்டும். இரயுமன்துறையில் உள்ள மீன்இறங்கு தளத்திற்கு வாகனங்கள் வந்து செல்ல வசதியாக தாமிரபரணி ஆற்றின் கரையோரம் சாலை அமைக்க வேண்டும். மீன் இறங்குதளத்தில் கழிப்பறை, மின்விளக்கு, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் படகுகள் அடித்து செல்லப்படுவதை தடுக்க தடுப்புகள் அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இரயுமன்துறை புனித லூசியாஸ் ஆலயம் முன்பு காலவரையற்ற தொடர் உண்ணாவிரதம் தொடங்கியது. பங்கு தந்தை ரெஜீஷ்பாபு தலைமை தாங்கினார். துணை பங்குத்தந்தை செபாஸ்டின் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் பங்கு நிர்வாகிகள் ஜாண் போஸ்கோ, டெல்லஸ், விஜயன், ஆன்டணி லாசர், சுரேஷ், ஜூலியஸ், பெதலிஸ், ஜெஸ்டின் மற்றும் மீனவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாலையில் தாசில்தார் ராஜசேகரன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜித் மற்றும் அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் போராட்டம் தோல்வியில் முடிவடைந்தது.
இதைதொடர்ந்து இரவு குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி மற்றும் போலீசார் போராட்டக்காரர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதற்கு மீனவர்கள், உண்ணாவிரதம் நடக்கும் இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினர். இதை தொடர்ந்து அதிகாரிகள் போலீசார் ஆலோசனை நடத்தினர். ஆனாலும் போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது.