விவசாய நிலத்தில் மண் அள்ளுவதை தடுக்க வேண்டும் - தென்னை விவசாயிகள் வலியுறுத்தல்

விவசாய நிலத்தில் மண் அள்ளுவதை தடுக்க வலியுறுத்தி தென்னை விவசாயிகள் மனு கொடுத்தனர்.

Update: 2020-08-25 06:30 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் மேற்கு தாலுகா தருமத்துபட்டி அருகேயுள்ள சுரக்காபட்டியை சேர்ந்த தென்னை விவசாயிகள், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், தருமத்துபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சுரக்காபட்டி கொம்பனை பகுதி சத்திரப்பட்டி கிராமத்தில் தனியார் விவசாய நிலம், அரசு புறம்போக்கு நிலத்தில் 15 அடி ஆழத்துக்கு மண் அள்ளப்படுகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீருற்று குறைந்து கொண்டே போகிறது. இதன் காரணமாக விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே, விவசாய, புறம்போக்கு நிலத்தில் மண் அள்ளுவதை தடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல் திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 5 பேர், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில், கடந்த 2017-ம் ஆண்டு எங்களுக்கு அரசு வீட்டுமனை பட்டா வழங்கியது. அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதுபற்றி கேட்டபோது எங்களுக்கு கொலைமிரட்டல் விடுத்தனர். எனவே, உரிய நடவடிக்கை எடுத்து எங்களின் நிலத்தை மீட்டு தரவேண்டும், என்று கூறியிருந்தனர்.

மேலும் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகானந்தம், தலைவர் காதர்மைதீன் மற்றும் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், மின்வாரியத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை இருக்கும் நிலையில், புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களிலும் சிறப்பாக பணியாற்றி பாராட்டை பெற்றோம். ஆனால், அனுபவம் மிகுந்த எங்களை ஒதுக்கிவிட்டு, கேங்மேன் பதவிக்கு புதியவர்களை நியமிக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது. அதற்கான தேர்வில் வயது மூப்பால் எங்களால் பங்கேற்க முடியவில்லை. எனவே, எங்களின் நீண்டநாள் கோரிக்கையான தினசரி ரூ.380 கூலியை வழங்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

அகில இந்திய மஜ்லிஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் ரியாஜ்அகமது தலைமையில் கொடுத்த மனுவில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் லஞ்சம் பெறப்படுவதாகவும், நோயாளிகளை மதுரைக்கு அனுப்புவதாகவும் தொடர்ச்சியாக புகார்கள் வருகின்றன. எனவே, மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்