விருத்தாசலம் அருகே, டாஸ்மாக் கடையில் ரூ.1½ லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளை - மர்மநபர்கள் கைவரிசை

விருத்தாசலம் அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ,1½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2020-08-25 06:15 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே தே.கோபுராபுரம் கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விற்பனையாளர்களாக பழனிவேல், கிருஷ்ணமூர்த்தி, மேற்பார்வையாளராக ராமகிருஷ்ணன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 22-ந் தேதி கடைக்கு வந்த அவர்கள், வியாபாரத்தை முடித்து விட்டு இரவு கடையை பூட்டிச்சென்றனர். நேற்று முன்தினம் தளர்வு இல்லா முழு ஊரடங்கு பின்பற்றப்பட்டதால் கடையை திறக்கவில்லை. இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவு நேரத்தில் டாஸ்மாக் கடையின் இரும்பு கதவில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கடையில் 22 பெட்டிகளில் இருந்த ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர்.

நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து, விருத்தாசலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது, டாஸ்மாக் கடையின் முன்பு காலி அட்டைபெட்டிகளும், 2 அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்களும் இருந்தன. மேலும் 200 மீட்டர் தூரத்துக்கு ஆங்காங்கே ஒரு சில மதுபாட்டில்களும் கிடந்தன. இதன் மூலம் நள்ளிரவில் மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றபோது சில மதுபாட்டில்கள் கீழே விழுந்திருப்பது தெரியவந்தது. மேலும் கடலூரில் இருந்து மோப்ப நாய் அர்ஜூன் வரவைக்கப்பட்டது. கடையில் இருந்து சிறிது தூரம் மோப்பம் பிடித்தபடி சென்ற அர்ஜூன், மீண்டும் கடைக்கு திரும்பி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கடலூரில் இருந்து தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் டாஸ்மாக் கடையில் இருந்த தடயங்களை சேகரித்தனர். இது தொடர்பாக விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்