கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கொரோனாவுக்கு ஊராட்சி செயலாளர் உள்பட 2 பேர் பலி - ஒரே நாளில் 56 பேருக்கு தொற்று

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஊராட்சி செயலாளர் உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-08-25 06:15 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 5 ஆயிரத்து 385 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 ஆயிரத்து 723 பேர் குணமடைந்துள்ளனர். 58 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று ஊராட்சி செயலாளர் உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-

உளுந்தூர்பேட்டை தாலுகா பின்னல்வாடி ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வரும் பழங்குடி கிராமத்தை சேர்ந்த 44வயது ஆண் நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 19-ந் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று இவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி சித்தேரி தெருவைச் சேர்ந்த 65 வயது ஆண் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 58-ல் இருந்து 60-ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று 463 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியானதில் 56 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 441 ஆக உயர்ந்துள்ளது. நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர். மேலும் அந்த பகுதிகளில் வேறு யாருக்காவது காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளதா என சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்