தொண்டி அருகே, இலங்கைக்கு கள்ளத்தனமாக படகில் செல்ல முயன்ற 2 பேர் கைது

தொண்டி அருகே இலங்கைக்கு கள்ளத்தனமாக படகில் செல்ல முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-08-25 05:00 GMT
தொண்டி,

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள தீர்த்தாண்டதானம் கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக 2 பேர் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தொண்டி இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் தலைமையில் எஸ்.பி.பட்டினம் போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த விழுப்புரம் மரக்காணம் அகதிகள் முகாமை சேர்ந்த அமல்ராஜ் (வயது 29), புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை சேர்ந்த அருண்நிக்சன் (25) ஆகிய 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் அமல்ராஜ் இலங்கையை சேர்ந்தவர் என்பதும், விழுப்புரம் மரக்காணம் அகதிகள் முகாமில் வசித்து வந்தவர் என்பதும் தெரிய வந்தது. அருண்நிக்சன் அவருடைய நண்பர் ஆவார்.

அமல்ராஜ் அடிக்கடி இலங்கைக்கு கள்ளத்தனமாக சென்று வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இங்கிருந்து கடல் மார்க்கமாக படகில் நறுமணப்பொருட்களை இலங்கைக்கு கடத்தி செல்வதை வழக்கமாக செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் சம்பவத்தன்று அமல்ராஜ், அருண்நிக்சன் ஆகிய 2 பேரும் பாஸ்போர்ட் இல்லாமல் படகு மூலம் இலங்கைக்கு கள்ளத்தனமாக செல்ல இருந்தது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்