புதிதாக 269 பேருக்கு தொற்று: நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்தை தாண்டியது
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நேற்று புதிதாக 269 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியது.
தூத்துக்குடி,
நெல்லை மாவட்டத்தில் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால் நேற்று நெல்லை மாவட்டதில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 77 ஆக குறைந்தது. இதில் நெல்லை மாநகர பகுதியை சேர்ந்தவர்கள் 25 பேர் ஆவார்கள். இதுதவிர அம்பை, மானூர், நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர், சேரன்மாதேவி, களக்காடு ஆகிய ஊர்களிலும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 565 ஆக உயர்ந்துள்ளது.
களக்காட்டை சேர்ந்த 60 வயதுடையவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நாகர்கோவில் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
தென்காசி- தூத்துக்குடி
தென்காசி மாவட்டத்தில் 94 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள், தென்காசி, செங்கோட்டை, கடையம், கடையநல்லூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்து 840 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 98 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 736 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை கடந்தது. நேற்று வரை மொத்தம் 10 ஆயிரத்து 6 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 627 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று கோவில்பட்டியை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்தார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வெளி மாவட்டங்களில் சிகிச்சை பெற்று இறந்தால், அவர்கள் தூத்துக்குடி மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை நேற்று 100-ஐ கடந்தது. இதுவரை 103 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
24 ஆயிரத்தை தாண்டியது
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் இதுவரை 24 ஆயிரத்து 141 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.