பெரம்பலூர் அருகே, மோட்டார் சைக்கிளில் வந்தவர் லாரி மோதி பலி - நண்பர் படுகாயம்

பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தவர் லாரி மோதி பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயமடைந்தார்.

Update: 2020-08-24 21:30 GMT
பெரம்பலூர், 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகா முகுந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 55). இவரது நண்பர் அதே பகுதியில் உள்ள குருக்கத்தான்சேரி கிளிமங்கலத்தை சேர்ந்த ரமேஷ்(50). இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு சென்று விட்டு, புறவழிச்சாலையில் தங்களது ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

பெரம்பலூரை அடுத்த சாயிபாபா கோவில் அருகே கல்பாடி குறுகிய பாலத்தில் நேற்று இரவு அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது எதிரே ஒரு வழிப்பாதையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவதற்காக சாலையின் வலதுபுறம் மோட்டார் சைக்கிளை திருப்பியபோது, அந்த வழியாக பின்னால் வந்த டாரஸ் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரமேஷ் பலத்த காயமடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி டிரைவரான நாமக்கல்லை சேர்ந்த முருகேசனிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்