ராட்சத குழாய் சேதமடைந்ததால் அனல்மின் நிலைய சாம்பல் கழிவுநீர் ஊருக்குள் புகுந்தது

மீஞ்சூர் அருகே வடசென்னை அனல் மின் நிலையத்திலிருந்து கழிவுநீரை வெளியேற்றும் ராட்சத குழாய் சேதமடைந்ததால், நிலக்கரி சாம்பல் ஊருக்குள் புகுந்தது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் வீடுகளை காலி செய்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-08-25 02:16 GMT
மீஞ்சூர்,

மீஞ்சூர் அருகே உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தின் முதல் அலகு முதல் யூனிட்டில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது. இங்குள்ள கொதிகலனில் இருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு 5 ராட்சத குழாய்கள் மூலம் பக்கிங்காம் கால்வாய், உப்பங்கழி, அத்திப்பட்டு ஊராட்சி, காட்டுப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட செப்பாக்கம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட சாம்பல் குளத்திற்கு கொண்டு சென்று சேமிக்கப்படுகிறது. பின்னர் சாம்பல் கழிவுகள் உலர் சாம்பலாக மாற்றப்பட்டு லாரிகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சாம்பல் கழிவுகள் உலர் நிலையை அடையும் போது காற்றில் தூசிகளாக பரவுவதாகவும், இதனால் ஏற்படும் காற்று மாசுபாட்டால் செப்பாக்கம் உட்பட அருகில் உள்ள கிராம மக்கள் பலவகையான நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்து வந்தனர்.

ராட்சத குழாய்கள் சேதம்

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் நீர் கழிவை வெளியேற்றும் ராட்சத குழாய்கள் ஆங்காங்கே சேதமடைந்ததில் கொதிக்கும் நீருடன் கலந்த நிலக்கரி சாம்பல் செப்பாக்கம் கிராமத்துக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. இந்த கழிவுநீர் சில வீடுகளிலும் புகுந்ததால் பொதுமக்கள் வசிக்க முடியாத சூழல் உருவாகியது.

இச்சம்பவம் குறித்து வடசென்னை அனல்மின் நிலைய அதிகாரி பாலசுப்பிரமணியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த செப்பாக்கம் கிராம மக்கள் அனைவரும் தங்கள் உடமைகளுடன் ஒன்றுகூடி ஊரை விட்டு காலி செய்ய திட்டமிட்டு நேற்று தயாராயினர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த காட்டுப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சேதுராமன், மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி ஆகியோர் வந்து அனைவரையும் தடுத்து நிறுத்தினார். அதைத்தொடர்ந்து மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் மதியரசன், அனல் மின் நிலைய தலைமை பொறியாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட அதிகாரிகள் கிராமத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ராட்சத குழாய்கள் மூலம் வெளியேறும் சாம்பல் கழிவு நீரால் தூசுகள் படிந்து காற்றில் பரப்புவதை தடுக்க வேண்டும் என்றும், குழாய் சேதமடைந்து சாம்பல் கழிவுநீர் ஊருக்குள் புகுந்ததால் அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் ராட்சத குழாய் அமைத்து சாம்பல் கழிவுநீரை குளத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்