ஆத்தூர் அருகே, விவசாயி அடித்துக்கொலை

ஆத்தூர் அருகே விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-;

Update: 2020-08-24 21:45 GMT
ஆத்தூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புங்கவாடி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 64). விவசாயி. இவரது மகன் ராஜீ (36). இவர் கடந்த 18-ந் தேதி இரவு ஆத்தூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் கோழிப்பண்ணை அருகே அதே பகுதியை சேர்ந்த அயோத்தி ராமன் (36) மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் நடுரோட்டில் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்தனர்.

இதைப்பார்த்த ராஜீ நடுரோட்டில் அமர்ந்து ஏன் மது அருந்துகிறீர்கள்? என்று தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து தனது தந்தை பொன்னுசாமிக்கு, ராஜீ தகவல் தெரிவித்தார். உடனே பொன்னுசாமி அங்கு வந்து, அயோத்தி ராமனிடம், எனது மகனிடம் ஏன் தகராறு செய்தாய்? என கூறி தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த, அயோத்தி ராமன், இரும்பு ராடால் பொன்னுசாமியின் தலையில் பலமாக அடித்தார். இதைப்பார்த்த ராஜீ, அந்த இரும்பு ராடை பிடுங்கி அயோத்தி ராமன் தலையில் ஓங்கி அடித்தார்.

இதில் படுகாயம் அடைந்த பொன்னுசாமி, அயோத்திராமன் ஆகியோர் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனளிக்காமல் பொன்னுசாமி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். மேலும் அயோத்தி ராமன் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் அயோத்தி ராமன் மீது கொலை வழக்கும், ராஜீ மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்