கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்வு கர்நாடக அரசு அறிவிப்பு

கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்தி கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

Update: 2020-08-25 00:49 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தினமும் கொரோனா பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. மாநிலத்தில் நேற்று வரை சுமார் 2¾ லட்சம் பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 5 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்று அதிகரித்து வந்தாலும், மற்ற மாநிலங்களை போல கர்நாடகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படவில்லை. கொரோனாவுக்காக கர்நாடகத்தில் இனிமேல் ஊரடங்கு கிடையாது என்று முதல்-மந்திரி எடியூரப்பா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

மாநிலத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருந்து வந்தது. அதாவது, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி தனிமைப்படுத்துவது, கொரோனா பாதித்தவர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு சீல் வைப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வந்தது.

கட்டுப்பாடுகள் தளர்வு

இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தையும் தளர்த்தி நேற்று இரவு கர்நாடக அரசு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடக அரசின் சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் ஜாவேத் அக்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு பரிசோதனை நடத்தி, அவர்களின் கைகளில் முத்திரை குத்தி 14 நாட்கள் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டு வந்தனர். இனிமேல் வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகம் வருபவர்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. தமிழ்நாடு, மராட்டியம், ஆந்திரா உள்ளிட்ட எந்த மாநிலத்தில் இருந்து வந்தாலும், அவர்களுக்கு எல்லைப்பகுதியில் பரிசோதனை நடத்தப்படாது.

வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களின் வீடுகள், கொரோனா பாதித்தவர்களின் வீடுகளுக்கு இனிமேல் சீல் வைக்கப்படாது.

தடையின்றி வரலாம்

வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்கள், பஸ்கள், ரெயில்கள், விமானங்களில் வருபவர்களுக்கும் இனிமேல் எந்த பரிசோதனை நடத்தப்படாது. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் பாஸ் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்துக்கும் எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் தடையின்றி கர்நாடகத்துக்குள் வரலாம்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் இனிமேல் நோட்டீசும் ஒட்டப்படாது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கர்நாடக அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்