நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் முழு ஊரடங்கு பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்; சாலைகள் வெறிச்சோடின
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினார்கள். சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
நெல்லை,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடந்த மாதத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைதோறும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி இந்த மாதத்தில் 4-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால் நெல்லை மாநகர பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. நெல்லை டவுன், பாளையங்கோட்டை, தச்சநல்லூர் ஆகிய மண்டல பகுதிகளில் உள்ள 100 சதவீத கடைகளும் மூடப்பட்டு இருந்தன. நெல்லை புதிய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
இறைச்சி கடைகள் மூடல்
பாளையங்கோட்டை மகராஜநகர் பகுதியில் 3 பூங்காக்களில் அமைக்கப்பட்டு உள்ள உழவர் சந்தைகள், பாளையங்கோட்டை போலீஸ் குடியிருப்பு பகுதி மற்றும் பொருட்காட்சி திடலில் உள்ள தற்காலிக காய்கறி கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.
நெல்லை டவுன் ஆர்ச் பகுதியிலும், பாளையங்கோட்டை பெல் மைதானத்திலும் ஆடு, கோழி, மீன் போன்ற இறைச்சி கடைகள் உள்ளன. இந்த கடைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். நேற்று முழு ஊரடங்கால் அனைத்து இறைச்சி கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
சாலைகள் வெறிச்சோடின
மாநகர பகுதியில் உள்ள பால் கடைகள், மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன. டீக்கடைகள், ஓட்டல்கள், பெட்டிக்கடைகள், பலசரக்கு கடைகள், ஜெராக்ஸ் கடைகள், இரும்பு கடைகள், ஜவுளி கடைகள், கம்ப்யூட்டர் விற்பனை கடைகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடந்தனர். ஆட்டோக்கள், வாடகை கார்கள் ஓடவில்லை.
இதனால் நெல்லை மாநகர பகுதி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம், கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப்பாலம், வண்ணார்பேட்டை ரவுண்டானா, வடக்கு புறவழிச்சாலை, திருவனந்தபுரம் ரோடு, மேலப்பாளையம் ரவுண்டானா, அம்பை சாலை, நெல்லை டவுன் ரத வீதிகள் உள்ளிட்ட பகுதிகள் எப்போதும் பரபரப்பாக காணப்படும். நேற்று வாகனங்கள் எதுவும் ஓடாததால், அந்த சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. முழு ஊரடங்கால் நெல்லை முடங்கியது.
கண்காணிப்பு தீவிரம்
நெல்லை மாநகர பகுதியில் முக்கிய சாலைகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆங்காங்கே இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களை போலீசார் நிறுத்தி விளக்கம் கேட்டனர்.
அத்தியாவசிய தேவையின்றி வெளியே வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேவையின்றி வெளியே சுற்றி திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தென்காசி
முழுஊரடங்கை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்து கடைகள், பால் கடைகள் திறந்து இருந்தன. மாவட்டத்தின் தலைநகரான தென்காசியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சுவாமி சன்னதி பஜார், அம்மன் சன்னதி பஜார், கூலக்கடை பஜார், ரத வீதிகள், கன்னிமாரம்மன் கோவில் தெரு, கீழ ஆவணி மூல வீதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.
பெரும்பாலான பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் வெளியே வாகனங்களில் சென்று வந்தனர். முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மாறாக வெளியில் சுற்றி திரிந்தவர்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்திலும் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. ஒரு சில மருந்து கடைகள், பால் கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தது. அதே போன்று வாகன போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. முழு ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கினார்கள். மேலும் ஆங்காங்கே போலீசார் வாகன சோதனை நடத்தி அத்துமீறி வெளியில் வந்தவர்களை பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.