மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 52). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மனைவி பேபி (40) மற்றும் 2 மகள்களுடன் சோழிங்கநல்லூரில் வசித்து வந்தார்.
மாமல்லபுரம் அருகே உள்ள காரணை கிராமத்தில் நடைபெற உள்ள தனது மனைவியின் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பரமசிவம் தனது மனைவி பேபியுடன் மோட்டார் சைக்கிளில் சோழிங்கநல்லூரில் இருந்து பழைய மாமல்லபுரம் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
மாமல்லபுரத்தை அடுத்த வடகடம்பாடி என்ற இடத்தில் சாலையின் வளைவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் சாலையில் நிலைத்தடுமாறி கவிழ்ந்தது. இதில் பரம்சிவம் மற்றும் அவரது மனைவி பேபி சாலையில் விழுந்தனர்.
சாவு
ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும் பரமசிவதின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த அவரது உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
காயம் அடைந்த அவரது மனைவி பேபி, தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் விசாரித்து வருகிறார்.