திருத்தணி அருகே ரூ.1 கோடி கேட்டு குழந்தையை கடத்திய உறவினர் கைது
திருத்தணி அருகே ரூ.1 கோடி கேட்டு குழந்தையை கடத்திய உறவினரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆர்.கே.பேட்டை இஸ்லாம் நகரைச் சேர்ந்தவர் முபாரக் (வயது 33). இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஷபியா (30). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் கடைசி மகனான அசாருதீன் (3) நேற்று முன்தினம் மதியம் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த நிலையில் திடீரென்று மாயமானான்.
குழந்தையை தேடி பெற்றோர் அலைந்த போது, மர்மநபர் ஒருவர் முபாரக்கிற்கு போன் செய்து குழந்தையை கடத்தி உள்ளதாகவும், ரூ.1 கோடி கொடுத்தால் குழந்தையை உயிருடன் ஒப்படைப்பதாகவும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த முபாரக், இதுபற்றி ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் குழந்தையை தேடி வருவதை அறிந்த மர்மநபர் குழந்தை அசாருதீனை வங்கனூர் கூட்ரோட்டில் தனியாக இறக்கிவிட்டு காரில் மாயமானார். குழந்தை அசாருதீன் தனியாக நின்று அழுது கொண்டிருந்ததை கண்ட பிரியாணி கடை உரிமையாளர் ஒருவர் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
உறவினர் கைது
மர்ம ஆசாமி முபாரக்கிற்கு பேசிய செல்போன் சிக்னலை வைத்து போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் சுலைமான் (30) என்பதும், முபாரக் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் என்பதும் தெரிய வந்தது.
முபாரக்கின் தாய்மாமன் மகனாகிய இவர், ஆர்.கே.பேட்டையில் அரசு பள்ளி எதிரே இறைச்சி கடை நடத்தி வருவதாகவும், தனக்கு ரூ.10 லட்சம் கடன் இருப்பதாகவும், பணத்தை கடனாக கேட்டால் தர மாட்டார்கள் என்பதால் குழந்தையை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டதாக போலீசில் சுலைமான் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. போலீசார் கைதான சுலைமானை புழல் சிறையில் அடைத்தனர்.