விதிகளை மீறுபவர்கள் எப்படி இலவச சிகிச்சை கேட்க முடியும்? கவர்னர் கிரண்பெடி ஆவேசம்
சட்ட விதிகளை மீறுபவர்கள் எப்படி இலவச சிகிச்சை கேட்க முடியும்? என்று கவர்னர் கிரண்பெடி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி,
இந்தியாவில் இன்னும் கொரோனா அதிகரிப்பதற்கு மக்கள் சட்டத்தை பின்பற்றாததே காரணம். ஊரடங்கு தளர்வு அளித்தவுடன் பல இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒரு மைல் தூரத்திற்கு வரிசையில் முண்டியடித்து கொண்டு மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கு தேவையான பொருட்களை வாங்க பல இடங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது. வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தியும் யாரும் அதனை மதிக்கவில்லை. இதனால் நோய் தொற்று அதிகமாகும். இப்படி நோய் பரப்புவதால் ஒவ்வொரு நோயாளிக்கும் ஆயிரக்கணக்கில் பணம் செலவிட வேண்டியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர், செவிலியர், மருந்து, வென்டிலேட்டர், மருத்துவமனை என அனைத்தும் தேவைப்படுகிறது.
பொறுப்பற்ற நடத்தை
சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், அரசின் சட்ட விதிகளை மீறுபவர்கள் எப்படி இலவச சிகிச்சை கேட்க முடியும்? எதற்காக அரசிடம் வருகிறார்கள். பணம் செலுத்தி சிகிச்சை பெற வேண்டியதானே? நாங்கள் வரி செலுத்துகிறோமே என கேட்கலாம். அனைவரும் மறைமுக வரி செலுத்துகிறோம். ஆனால் நேரடி வரியை எவ்வளவு பேர் செலுத்துகிறார்கள்? ஒரு பில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் உண்மையில் சில கோடி பேர் மட்டுமே வரி செலுத்துகிறார்கள். பொறுப்பற்ற நடத்தை கொண்ட மக்களை நமது அரசு நிர்வகிக்க வேண்டிய சூழலில் இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.