மார்க்கெட், இறைச்சி கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத பொதுமக்கள் போலீசார் எச்சரிக்கை
புதுவையில் காய்கறி, இறைச்சி, மீன்கடைகளில் நேற்று சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்கவில்லை. அவர்களுக்கு போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.
புதுச்சேரி,
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், வீட்டைவிட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் கடைகளின் முன்பும், வர்த்தக நிறுவனங்களிலும் ஒரு மீட்டர் இடைவெளியில் குறியீடு வரையப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று புதுவையில் உள்ள இறைச்சி கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு இறைச்சிகளை வாங்கினர். அப்போது அந்த வழியாக சென்ற போலீசார், பொதுமக்கள் சமூக இடைவெளி இல்லாமல் கூடி நின்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
காற்றில் பறந்த சமூக இடைவெளி
உடனே அவர்கள் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். மேலும் கடையின் உரிமையாளர்களை அழைத்து கடைக்கு வருபவர்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கண்டிப்பாக முகமூடி அணிந்து வருபவர்களுக்கு மட்டும்தான் இறைச்சிகளை விற்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். புதுவையில் நேற்று ஒரு கிலோ மட்டன் ரூ.750-க்கும், சிக்கன் ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
புதுச்சேரி உப்பளம் சாலையில் இருந்து மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் வழி, சிமெண்டு சாலை உள்பட பல்வேறு இடங்களில் நேற்று காலை பெண்கள் தரையில் கடைவிரித்து மீன் வியாபாரம் செய்தனர். மீன்கள் வாங்குவதற்காக மக்கள் திரண்டதால் சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டது. அங்கு ரோந்து சென்ற போலீசார் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு எச்சரிக்கை செய்தனர்.
அபராதம்
நெல்லித்தோப்பு மார்க்கெட்டில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தனர். அப்போது அங்கு ரோந்து சென்ற போலீசார் ஒலிபெருக்கி மூலம் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். புதிய பஸ் நிலையத்தில் உள்ள காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டனர். அங்கு சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.