ஒரு மாதத்திற்கு பிறகு கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், பலியும் குறைந்தது இதுவரை 24 லட்சம் பேருக்கு பரிசோதனை
கர்நாடகத்தில் ஒரு மாதத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பும், பலியும் குறைந்துள்ளது. இதுவரை 24 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதுவும் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தினம், தினம் புதிய உச்சத்தை தொட்டு வந்தது. அதாவது, தினமும் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியும், பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியும் சென்றது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு கர்நாடகத்தில் நேற்று கொரோனா பாதிப்பும், அதனால் ஏற்படும் பலி எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதனால் மாநில மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்ததாவது:-
5,938 பேருக்கு பாதிப்பு
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 71 ஆயிரத்து 876 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று புதிதாக 5,938 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 77 ஆயிரத்து 814 ஆக உயர்ந்து உள்ளது.
புதிதாக பெங்களூரு நகரில் 2,126 பேருக்கும், பல்லாரியில் 406 பேருக்கும், தாவணகெரேயில் 265 பேருக்கும், கொப்பலில் 256 பேருக்கும், சிவமொக்காவில் 246 பேருக்கும், கலபுரகியில் 203 பேருக்கும், ஹாசனில் 196 பேருக்கும், தார்வாரில் 194 பேருக்கும், தட்சிண கன்னடாவில் 193 பேருக்கும், கதக்கில் 182 பேருக்கும், ஹாவேரியில் 150 பேருக்கும், பாகல்கோட்டையில் 139 பேருக்கும், பெலகாவியில் 136 பேருக்கும், விஜயாப்புராவில் 134 பேருக்கும், உடுப்பியில் 117 பேருக்கும், துமகூருவில் 112 பேருக்கும், உத்தர கன்னடாவில் 108 பேருக்கும், மைசூருவில் 92 பேருக்கும், ராய்ச்சூர், சிக்பள்ளாப்பூரில் தலா 81 பேருக்கும், யாதகிரியில் 73 பேருக்கும், சித்ரதுர்காவில் 71 பேருக்கும், மண்டியாவில் 51 பேருக்கும், கோலாரில் 47 பேருக்கும், ராமநகரில் 42 பேருக்கும், பீதரில் 38 பேருக்கும், பெங்களூரு புறநகரில் 35 பேருக்கும், சாம்ராஜ்நகரில் 23 பேருக்கும், குடகில் 15 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
68 பேர் பலி
இதுபோல நேற்று முன்தினம் வரை 4,631 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகி இருந்தனர். நேற்று புதிதாக 68 பேர் மட்டுமே இறந்து உள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்து 699 ஆக உயர்ந்து உள்ளது. புதிதாக பல்லாரியில் 7 பேரும், பெங்களூரு, தட்சிண கன்னடா, கொப்பல், துமகூருவில் தலா 5 பேரும், ஹாவேரி, சிவமொக்கா, விஜயாப்புராவில் தலா 4 பேரும், சித்ரதுர்கா, தார்வார், ஹாசனில் தலா 3 பேரும், சிக்பள்ளாப்பூர், தாவணகெரே, கலபுரகி, பெலகாவி, மண்டியா, ராய்ச்சூர், கோலார், உடுப்பியில் தலா 2 பேரும், பாகல்கோட்டை, சாம்ராஜ்நகர், உத்தர கன்னடா, யாதகிரியில் தலா ஒருவரும் இறந்து உள்ளனர்.
24 லட்சம் பேருக்கு பரிசோதனை
நேற்று ஒரேநாளில் 4 ஆயிரத்து 996 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாநிலம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 89 ஆயிரத்து 564 பேர் குணமடைந்து உள்ளனர். மேலும் 83 ஆயிரத்து 551 பேர் சிகிச்சையில் உள்ளனர். கர்நாடகத்தில் இதுவரை 24 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ரேபிட் ஆன்டிஜென் முறையில் 6 லட்சத்து 61 ஆயிரத்து 791 பேருக்கும், ஆர்.டி.பி.சி.ஆர். முறையில் 17 லட்சத்து 52 ஆயிரத்து 160 பேருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெங்களூருவில் நேற்று ஒரேநாளில் 2,126 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் பெங்களூருவில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 875 ஆக உயர்ந்து உள்ளது. பெங்களூருவில் நேற்று 5 பேர் மட்டுமே கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். பெங்களூருவில் கொரோனாவுக்கு இதுவரை 1,668 பேர் பலியாகி உள்ளனர்.