ஈரோடு மாவட்டத்தில், கொரோனாவுக்கு 2 பேர் பலி; சாவு எண்ணிக்கை 32 ஆக உயர்வு - மேலும் 45 பேருக்கு தொற்று உறுதி
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள். இதனால் சாவு எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மாநகர் பகுதியில் தினந்தோறும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் மாவட்ட நிர்வாகம் மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மாநகர் பகுதியில் சூரம்பட்டிவலசு, பி.பி.அக்ரஹாரம், காந்திஜி ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தினந்தோறும் பலருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
அப்போது யாருக்காவது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் உடனடியாக, ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தால் வீட்டிலேயே அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். வீட்டில் வசதி இல்லாத பட்சத்தில் பி.வி.பி. பள்ளிக்கூடத்தில் உள்ள சிறப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு தங்க வைக்கப்படுகிறார்கள். கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தால் மட்டுமே பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் வரை 915 பேர் சிகிச்சையில் இருந்தனர்.
இந்த நிலையில் பவானி பகுதியை சேர்ந்த 64 வயது முதியவரும், ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த 69 வயது முதியவரும் காய்ச்சல் காரணமாக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 17-ந்தேதி அனுமதிக்கப்பட்டனர். அப்போது அவர்களுடைய ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனை முடிவில் அவர்கள் 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர்கள் 2 பேரும் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று மாவட்டம் முழுவதும் 45 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர 2 பேர் ஈரோடு மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதனால் ஏற்கனவே 2 ஆயிரத்து 24 பேர் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று2 ஆயிரத்து 71 ஆக உயர்ந்தது.
நேற்று புதிதாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் 24 பேருக்கும், பெருந்துறை பகுதியை சேர்ந்த 8 பேருக்கும், கொடுமுடி பகுதியை சேர்ந்த 3 பேருக்கும், கோபி மற்றும் மொடக்குறிச்சி பகுதிகளில் தலா 2 பேருக்கும், நம்பியூர், சத்தியமங்கலம், நசியனூர், பவானி ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த 2 பேர் ஈரோடு மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதே நேரம் நேற்று ஒரே நாளில் 73 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 887 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 32 பேர் இறந்துள்ள நிலையில், 1,152 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.