ஈரோடு வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் பயங்கர தீ - 5 கி.மீ.தூரம் பரவிய புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி

ஈரோடு வெண்டிபாளையம் குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீயால் 5 கி.மீ. தூரத்துக்கு புகைமூட்டம் பரவியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.;

Update: 2020-08-23 22:15 GMT
ஈரோடு, 

ஈரோடு மாநகர் பகுதியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் பாதி வெண்டிபாளையம் குப்பை கிடங்கிலும், மீதி வைராபாளையம் குப்பை கிடங்கிலும் கொட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் குப்பைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் அதனை சுற்றி உள்ள பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வந்தனர். இதனால் இந்த குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

அதனால் வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் குப்பை சேருவதை தடுக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை உரமாக்கும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக குப்பை கிடங்கில் தற்போது ஓரளவு குப்பைகள் குறைந்துள்ளது.

மேலும் மாநகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என்று தரம் பிரித்து வெண்டிபாளையம் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென வெண்டிபாளையம் குப்பை கிடங்கு தீப்பிடித்து எரிந்தது.

இந்த பயங்கர தீயால் குப்பை கிடங்கில் இருந்து அதிக அளவில் கரும்புகை வெளியேறியது. இந்த புகை சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பரவியது. இதன் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டு அவதி அடைந்தனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதி மக்கள் இதுபற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ஈரோடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து 2 வண்டிகளும், மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு வண்டியும் சம்பவ இடத்திற்கு வந்தது.

மேலும் மாநகராட்சி குடிநீர் லாரிகள் 10-க்கும் மேற்பட்டவையும் அங்கு சென்று தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனாலும் தீ கட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்