ஊராட்சிகளுக்கு ரூ.1.34 கோடியில் குப்பை சேகரிக்கும் பேட்டரி வண்டிகள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நடைபெற்ற விழாவில் ஊராட்சிகளுக்கு ரூ.1.34 கோடி மதிப்பில் 54 குப்பை சேகரிக்கும் பேட்டரி வண்டிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 19 ஊராட்சிகளுக்கு பேட்டரியுடன் கூடிய குப்பை சேகரிக்கும் வண்டிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். ஏ.கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.வி.ரெங்கநாதன், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் தொ.மு.நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி வரவேற்றார். இந்த விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 19 ஊராட்சிகளுக்கு ரூ.71 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் 29 பேட்டரியுடன் கூடிய குப்பை சேகரிக்கும் வண்டிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் தணிகாசலம், ஒன்றியக்குழு தலைவர் பாஞ்சாலை கோபால், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தில், தாசில்தார் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பழகன், கவுரி, மாவட்ட கவுன்சிலர் கவிதா சரவணன், கூட்டுறவு சங்க தலைவர் வீரமணி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
காரிமங்கலம் ஒன்றியம்
இதேபோன்று காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சிகளுக்கு பேட்டரியுடன் கூடிய குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வழங்கும் விழா கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு ரூ.62 லட்சம் மதிப்பில் பேட்டரியுடன் கூடிய 25 குப்பை சேகரிக்கும் வண்டிகளை சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர்களிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காரிமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெரியண்ணன், மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர், மாவட்ட கவுன்சிலர் காவேரி, தாசில்தார் கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, தண்டபாணி, கூட்டுறவு சங்க தலைவர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த 2 ஊராட்சி ஒன்றியங்களிலும் மொத்தம் ரூ.1.34 கோடி மதிப்பில் பேட்டரியுடன் கூடிய 54 குப்பை சேகரிக்கும் வண்டிகள் வழங்கப்பட்டன.