ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 2 முககவசங்கள் கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன்கார்டு தாரர்களுக்கு தலா 2 முககவசங்கள் வழங்கும் நிகழ்ச்சியை கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார்.;

Update: 2020-08-22 01:41 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பாக நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள ரேஷன்கார்டுதாரர்களுக்கு முக கவசங்களை வழங்கும் வகையில் காதர் பள்ளிவாசல் தெருவில் உள்ள ரேஷன்கடையில் முககவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கலெக்டர் வீரராகவராவ் முககவசங்களை வழங்கி கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் முதல்கட்டமாக நகர்ப்புறங்களில் குடியிருக்கும் அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு 2 விலையில்லா முக கவசங்கள் வீதம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒதுக்கீடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3 லட்சத்து 69ஆயிரத்து 415 ரேஷன்கார்டுகளில் நகரசபை பகுதிகளில் 61ஆயிரத்து 544 கார்டுகளும், பேரூராட்சி பகுதியில் 24 ஆயிரத்து 560 ரேஷன்கார்டுகளும், கிராமப்புறங்களில் 2 லட்சத்து 83ஆயிரத்து 311 கார்டுகளும் உள்ளன. நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள 86 ஆயிரத்து 104 கார்டுதாரர்களுக்கு 3 லட்சத்து 3 ஆயிரத்து 312 குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 2 முக கவசங்கள் வீதம் வழங்கும் வகையில் 6 லட்சத்து 7 ஆயிரம் முக கவசங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் மணிகண்டன், பரமக்குடி சதன்பிரபாகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் எம்.ஏ.முனியசாமி, மாவட்ட வருவாய் அதிகாரி சிவகாமி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜலெட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டோபர் ஜெயராஜ் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்