பட்ஜெட்டில் அறிவித்த திட்டத்தை அமல்படுத்த அதிகாரிகளுடன் நாராயணசாமி ஆலோசனை

ஒவ்வொரு துறைதோறும் அதிகாரிகளை அழைத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி மறுஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார்.

Update: 2020-08-22 01:23 GMT
புதுச்சேரி,

புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில் ஒவ்வொரு துறைதோறும் அதிகாரிகளை அழைத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி மறுஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று அமைச்சர் ஷாஜகான் வகிக்கும் துறைகள் தொடர்பான மறுஆய்வு கூட்டம் சட்டசபை வளாகத்தில் 4-வது மாடியில் உள்ள கருத்தரங்க அறையில் நடந்தது.

கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் ஷாஜகான், அரசு செயலாளர் சரண், கலெக்டர் அருண், இயக்குனர்கள் பிரியதர்ஷினி, சிவக்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். அப்போது பட்ஜெட்டில் இடம்பெற்ற அறிவிப்புகளை அமல்படுத்த விரைவாக நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் காவல்துறை மற்றும் சிறைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது, காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது மற்றும் அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டார். மேலும் பதவி உயர்வு உள்ளிட்ட இதர பணிகளை செய்து முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் அமைச்சர் ஷாஜகான், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீ வஸ்தவா மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த பேரிடர் மேலாண்மை குழு கூட்டத்தில் ஏனாமில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள்