புதுச்சேரியில் கார் திருடிய 2 பேர் கைது 5 சொகுசு கார்கள் பறிமுதல்

புதுவையில் கார்கள் திருட்டு வழக்கில் திருச்சியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2020-08-22 01:16 GMT
மூலக்குளம்,

புதுச்சேரி பூமியான்பேட்டை ஜவகர் நகரை சேர்ந்தவர் டாக்டர் நிர்மல்குமார். இவரது சொகுசு காரை கடந்த 11.3.2020 அன்று இரவு மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இது தொடர்பாக அவர் ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு மர்மநபர்களை தேடி வந்தனர்.

தொடர்ந்து தமிழக பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நிர்மல்குமாரின் சொகுசு காரை திருடிச்சென்றது திருச்சியை சேர்ந்த 2 நபர்கள் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இதனை தொடர்ந்து வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுபம் கோஷ் உத்தரவின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் திருச்சிக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த ராஜாமணி என்கிற பெல்மணி (வயது 44), ஜாபர் உசைன் (24) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் நிர்மல்குமாரின் காரை திருடிச்சென்றதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் சென்னையில் இதேபோல் மேலும் 4 சொகுசு கார்களை திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பல்வேறு இடங்களில் இருந்து 5 சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் புதுவைக்கு அழைத்துவரப்பட்டனர்.

அவர்கள் கொரோனா பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைக்க உள்ளனர். மேலும் அவர்கள் சென்னையில் திருடிய 4 கார்கள் தொடர்பாக சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்